சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.
Chennai: ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அதிகாரிகளின் வழிகாட்டுதல் பேரில்தான் சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டதாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனிடம் அப்போலோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததை தொடர்ந்து, நீதி விசாரணைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆறுமுகச்சாமி கமிஷனிடம் வாக்கு மூலம் அளித்து வருகின்றனர். இதற்கிடையே, சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததால், அந்த மருத்துவமனையை சேர்ந்த 30-க்கும் அதிகமானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் சார்பாக ஆறுமுகச்சாமி கமிஷன் முன்பு பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில்தான் ஜெயலலிதாவின் நடமாட்டம் இருந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள், அணைக்கப்பட்டன. சிகிச்சை பெற்ற அறையிலும், குறிப்பாக ஐ.சி.யு., சி.சி.யு., என எங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டவில்லை. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனையின் நுழைவாயில் பகுதி, மற்றும் சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அப்போலோ தரப்பு வழக்கறிஞர் மைமூனா பாஷா கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் அவர் கூறுகையில், “ ஸ்கேன் போன்ற டெஸ்டுகளை எடுக்க ஜெயலலிதா செல்லும்போது, அந்த பாதையில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டு விடும். இது உளவுத்துறை ஐ.ஜி. கே.என். சத்திய மூர்த்தி உள்ளிட்ட போலீசாரின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. டெஸ்ட் முடிந்து ஜெயலலிதா தனது அறைக்கு சென்ற பின்னர், சிசிடிவி கேமராக்கள் ஆன் செய்யப்படும் என்றார்.
முன்னதாக கடந்த வெள்ளியன்று முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவின் செயலர் ரமேஷ் சந்த் மீனா, அப்போலோ மருத்துவமனையின் சுப்பையா விஸ்வநாதன் உள்ளிட்டோர் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.