New Delhi: கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு, ஆப்பிள் நிறுவனம் 7 கோடி ரூபாயை நிவாரணம் மற்றும் சீரமைப்பு நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
“ கேரளாவில் ஏற்பட்ட பேரிடரைக் கண்டு எங்கள் மனம் கலங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், மறு சீரமைப்புக்கு உதவவும் மெர்சி கார்ப்ஸ் அமைப்பு மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் சேர்த்து 7 கோடி ரூபாய் வழங்க இருக்கிறோம்” என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தனது இணையதளம், ஐ ட்யூன்ஸ், ஐ ஸ்டோரிலும் மக்கள் நன்கொடை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது ஆப்பிள். 5$ முதல் 200 டாலர்கள் வரை நன்கொடை செலுத்தலாம். இந்த தொகை மெர்ஸி கார்ப்ஸ் அமைப்புக்கு சென்று சேரும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.
கேரளாவில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இருந்த போதும் இன்னும் 8.69 லட்சம் பேர் 2787 முகாம்களில் தங்கியுள்ளனர்.
மே மாதம் பருவ மழை தொடங்கியது முதல், பலி எண்ணிக்கை தொடங்கியதாகவும், ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு பிறகு 265 பேர் பலியாகியுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.