ஹைலைட்ஸ்
- எம்.கே.யூ பல்கலை., துணை வேந்தர் நியமனத்தில் குழப்பம்
- நியமன நடைமுறைகளை மீண்டும் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
- 3 மாதங்களில் துணை வேந்தர் பட்டியலை சமர்பிக்க சொல்லி ஆணை
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பி.பி. செல்லத்துரை நியமிக்கப்படுவதாக இருந்த நிலையில் நியமனத்தை ஒத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் லியோனல் ஆன்டனி ராஜ் மற்றும் ‘டிராஃபிக்’ ராமசாமி ஆகியோர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபது இந்திரா பேனர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு இவ்விவகாரத்தில் நேற்று தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் செல்லத்துரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டார். அவர் நியமனத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சந்தேகப்படும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கான துணை வேந்தர் நியமிப்பது தொடர்பாக தேர்வு கமிட்டிக்கு மூன்று தகுதியான நபர்களின் பெயர்ப் பட்டியலை தேர்ந்தெடுத்துக் கூறுமாறு அறிவுறுத்தி உள்ளது.
முன்னர் சமர்பிக்கப்பட்ட தேர்வு கமிட்டியில் உள்ள துணைவேந்தருக்கான மூன்று பேர் கொண்ட பட்டியலில் ஒருவரது பெயர் வலுக்கட்டயாமாக திணிக்கப்பட்டது என்றும் மூன்றாம் நபர் ஒருவரின் தலையீடால் இது நேர்ந்தது என்றும் வழக்கில் விசாரணையின் போது நீதிமன்றம் குற்றம் சாட்டியது. மேலும், பின்னாளில் அப்படி வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட நபர் தான் காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் பெற்றுள்ளார் என்றும் கூறியது.
இதுகுறித்து நீதிமன்றம் இறுதியாக கூறுகையில், ‘தேர்வு கமிட்டி சுதந்திரமாக எந்த வற்புறுத்தலும் சார்பும் இன்றி செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர் நல்ல பரந்த மனப்பான்மையுடன், நல்ல ஆலோசகராக, ஆழ்ந்த அறிவும், விவாதிக்கும் திறனும் கொண்டவராக இருக்க வேண்டும். இப்பதவிக்கு தகுதியான, சரியான நபரே துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட வேண்டும்’ என்றது.
மேலும், தேர்வுப் பட்டியல் இன்னும் மூன்று மாதங்களுக்குள் தயாராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)