"கொரோனா அச்சமும், பதற்றமும் விலகும் வரை இத்தகைய அதிர்ச்சி விளையாட்டுகளை ஒதுக்கி வைப்போம்"
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் நேற்று மட்டும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
- தமிழகத்தில் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்
- இந்திய அளவிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு
ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று ‘உலக முட்டாள்கள் தினம்' என்று சொல்லப்படுகிறது. இன்றைய தினத்தில் பலரும் தங்களுக்குத் தெரிந்தவர்களையும், நெருக்கமானவர்களையும் பல்வேறு விஷயங்கள் செய்து விளையாட்டாக ஏமாற்றுவார்கள். ஆனால், தற்போது கொரோனா பீதியால் உலகமே தத்தளித்துக் கொண்டிருப்பதால், இன்றைய தினத்தில் யாரும் தேவையற்ற விஷயங்களை செய்து மற்றவர்களை கேலி செய்ய வேண்டாம் என்று அரசு தரப்பும், முக்கியப் பிரமுகர்களும் சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்றைய தினம் பற்றி, “இன்று உலக முட்டாள்கள் தினம் தான். ஆனால், நாடு... ஏன் உலகம் இன்றிருக்கும் சூழலில் எவரையும் முட்டாள்களாக்க முயல வேண்டாம். கொரோனா அச்சமும், பதற்றமும் விலகும் வரை இத்தகைய அதிர்ச்சி விளையாட்டுகளை ஒதுக்கி வைப்போம். மக்களிடம் நம்பிக்கையை விதைப்போம்,” என்று கருத்து கூறியுள்ளார்.
கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அது தற்போது நடைமுறையில் இருக்கிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பற்றி ராமதாஸ், “தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி நாளை தொடங்கும் நிலையில், நியாயவிலைக் கடைகளில் கூட்டம் சேருவது தவிர்க்கப் படுவதையும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுக்கான நிவாரண உதவிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேமுறையை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கே சென்று உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும்,” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.