அர்பாஸ் கான் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பு கூறுகிறது
ஹைலைட்ஸ்
- அர்பாஸ் கான், ரூ.2.8 கோடியை புக்கி ஓருவரிடம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது
- விசாரணையின் போது குற்றத்தை கான், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது
- புக்கி சோனு தான் இந்த பெட்டிங் விஷயத்தில் முக்கிய குற்றவாளி
Thane: ஐபிஎல் போட்டிகளை ஒட்டி சூதாட்டம், பெட்டிங், மேட்ச் ஃபிக்சிங், ஸ்பாட் ஃபிக்சிங் போன்றவை நடத்தப்படுவது தொடர் கதையாகியுள்ளது. இந்த முறை ஐபிஎல் பெட்டிங் சர்ச்சையில் மாட்டியுள்ளது பாலிவுட் நட்சத்திரம் அர்பாஸ் கான்.
அர்பாஸ், சோனு ஜலான் என்ற புக்கி மூலம் இந்த ஐபிஎல் தொடரின் போது பெட்டிங்கில் ஈடுபட்டதாகவும், அப்போது 2.8 கோடி ரூபாயை பந்தயம் வைத்து இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கடனை அர்பாஸ் அடைக்க முடியாததால், சோனு அவரை மிரட்டியுள்ளதாக தெரிகிறது.
ஒரு பக்கம் அர்பாஸுக்கு நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் மகாராஷ்டிரா போலீஸ் பெட்டிங் குறித்த விசாரணையில் சோனுவை கைது செய்தனர். சோனுவுக்கு அர்பாஸ் கானுடன் தொடர்பு இருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வருகிறது. பின்னர் அர்பாஸை அழைத்து விசாரித்ததில் அவர் முழு உண்மையையும் ஒப்புக் கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிரா போலீஸ், `அர்பாஸை முறைப்படி சம்மன் கொடுத்து அழைத்தோம். அவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு விசாரணைக்கு வந்தார். விசாரணையின் போது அவர் கூறியவற்றை நாங்கள் பதிவு செய்துவிட்டோம். அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தார்' என்று கூறப்பட்டு உள்ளது.
விசாரணைக்குப் பின்னர் அர்பாஸ் கான், `போலீஸிடம் நான் பேசியது எல்லாம் பதிவாகியுள்ளது. போலீஸுக்கு என்னென்னத் தேவையோ அத்தனையையும் என்னிடம் கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் நான் பதில் சொன்னேன். தொடர்ந்து அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பேன்' என்று கூறியுள்ளார்.
சோனு, தனது எல்லா வாடிக்கையாளர்கள் பற்றியும் ஒரு டயரியில் எழுது வைத்திருந்தாராம். போலீஸின் விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமே, அர்பாஸுக்கும் சோனுவுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பதை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. சோனுவுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி தாவுத் இப்ராகிமுக்கும் தொடர்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
சோனு, ஐபிஎல் பெட்டிங்கைப் பொறுத்தவரை இந்திய அளவில் முக்கிய புக்கி என்று கூறப்படுகிறது.