"நவம்பர் மாதத்தில் சூப்பர் ஸ்டார் கட்சி ஆரம்பிப்பார்”
ஹைலைட்ஸ்
- விரைவில் ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்
- நவம்பர் மாதம் கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிட வாய்ப்பு
- 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ரஜினி திட்டம்
நடிகர் ரஜினிகாந்துடன் அதிமுக அமைச்சர் பலர் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஜினி, விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுக அமைச்சர்கள் குறித்தான இந்த செய்தி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
ரஜினிக்கு மிக நெருக்கமானவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமாக செயல்பட்டு வந்த கராத்தே தியாகராஜன், “ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று சிலர் சொல்கிறார்கள். அந்தத் தகவல் பற்றி அறிந்தேன். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிக்க சாத்தியமில்லை. ஆனால் அதிலிருந்து ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின்னர், நவம்பர் மாதத்தில் சூப்பர் ஸ்டார் கட்சி ஆரம்பிப்பார்” என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் உறுதிபட தகவல் தெரிவித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பேன் என்பது குறித்துப் பேசினார். அப்போது, தனக்கு முதல்வராகும் விருப்பமில்லை என்றும் அவர் கூறினார்.
“தமிழக களத்தில் தற்போது இரண்டு பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்ப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அதே நேரத்தில் விட்டுவிட்டும் போக முடியாது” என்று சூசகமாக தெரிவித்திருந்தார் ரஜினி.
இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் ரஜினியோடு தொடர்பில் உள்ளனரா என்பது குறிதுத தமிழக அமைச்சர் ஜெயக்குமார், “இது உண்மைக்குப் புறம்பான தகவல். புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு விஸ்வாசமாக இருந்தது போல, புரட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தது போல, இப்போது அதிமுகவில் இருக்கும் அனைவரும் தலைமைக்கு விஸ்வாசமாக இருக்கும் நபர்கள். ஒரு இடத்திலிருந்து இனொனரு இடத்துக்குத் தாவும் துரோகிகள் அதிமுகவில் இல்லை,” என்று கொதிப்புடன் பதில் கூறியுள்ளார்.