This Article is From Apr 19, 2019

அரியலூரில் குடியிருப்பில் புகுந்து தாக்கிய விவகாரம்: 20 பேர் மீது வழக்குப்பதிவு!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரியலூரில் குடியிருப்பில் புகுந்து தாக்கிய விவகாரம்: 20 பேர் மீது வழக்குப்பதிவு!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்பரப்பியில் வாக்குப்பதிவு மையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தேர்தல் சின்னமான பானையை ஒரு பிரிவினர் ரோட்டில் போட்டு உடைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மற்றொரு தரப்பினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினர் வசித்துவந்த தெருவில் புகுந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 3 பேரை அடித்து மண்டையை உடைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொன்பரப்பியில் சிலரது இரு சக்கரவாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

அதன்பிறகு, அந்த தாக்குதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் தீவிரமடையாமல் இருக்க 150கும் மேற்பட்ட போலீசார் 13 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோதலின் காரணமாக 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, தாக்குதல் நடந்த சமயத்தில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தி தொடர்பாளரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தொடர்ந்த வழக்கு காரணமாவும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

.