லடாக்கில் நிலைமை விரைவில் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- சீனா நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்
- படுகாயம் அடைந்தவர்கள் லே ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்
- ராணுவ தலைமை தளபதி நரவானே நேரில் சென்று ஆறுதல் கூறினார்
New Delhi: லடாக்கில் சீன ராணுவத்தின் தாக்குதலால் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய வீரர்களை நேரில் சந்தித்து ராணுவ தலைமை தளபதி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
லடாக்கில் இந்தியா – சீனா வீரர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கு, ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே லடாக்கில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
லே-யில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு சீன ராணுவத்தின் தாக்குதலால் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் இந்திய வீரர்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
கல்வான் ஏரி அருகே நடந்த இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உள்பட மொத்தம் 20 வீரர்களை இந்திய ராணுவம் இழந்தது.
இதையடுத்து நிலைமையை அமைதிக்கு கொண்டு வருவதற்காக இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று நடந்த இந்த பேச்சுவார்த்தை சுமார் 11 மணிநேரம் நீடித்தது.
முடிவில் இருநாட்டு படைகளையும் பரஸ்பரம் திரும்பப் பெற்றுக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1967-ம் ஆண்டுக்கு பின்னர் இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மிகப்பெரும் மோதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லே-வில் இந்திய வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் மற்றொரு முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராணுவ தலைமை தளபதி புறப்பட்டுச் சென்றார்.
கடந்த வாரம் திங்களன்று நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். 76 பேருக்கு காயம் ஏற்பட்டது. கற்கள், ஆணி அடிக்கப்பட்ட கம்பிகள், இரும்பு கம்புகள் உள்ளிட்டவற்றால் சீன ராணுவம் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலியான சீன வீரர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 45 என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த இடத்தை விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதன்பின்னர் விமானப்படையின் போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டன.