சீனாவுடனான எல்லை பிரச்னை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
New Delhi: எல்லை பிரச்னை தொடர்பாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, நாளை முதல் 2 நாட்கள் கூட்டத்தை உயர் அதிகாரிகளுடன் நடத்தவுள்ளார்.
இந்த கூட்டத்தின்போது சமீபத்தில் எழுந்திருக்கும் சீனா, நேபாள எல்லை சவால்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இந்தியா - சீனாவுடன் லடாக் பிராந்தியத்தில் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இங்கு சமீபகாலமாக சீனா அத்துமீறி நடந்து வரும் நிலையில், அங்கு சீனாவுக்கு பதிலடி கொடுக்க 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் எல்லையில் சற்று அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தை ராணுவ தலைமை தளபதி ஏற்பாடு செய்துள்ளார்.
கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் இந்திய மற்றும் சீன ராணுவ படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலைப்பாடு 2017ல் டோக்லாம் நெருக்கடிக்குப் பின்னர் மிகப்பெரிய ராணுவ முகமாக மாறும் என்பதைக் குறிக்கிறது.
இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, 100 கூடாரங்களை சீன ராணுவம் அமைத்து வருவதாகவும், பதுங்குக் குழிகள் அமைக்கும் நோக்குடன் கன ரக இயந்திரங்களை கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது, இந்தியாவுடனான பிரச்னையை கூடிய விரைவில் சுமுகமாக தீா்த்துக் கொள்ள சீனா தயாராக இல்லை என்பதை வெளிக்காட்டுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பூடான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியில் இந்திய, சீன படைகள் இடையே கடந்த 2017-இல் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சுமார் 73 நாள்களுக்கு போர்ப் பதற்றம் நீடித்தது. பின்னா், எல்லையில் அமைதியை பராமரிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதைத் தொடா்ந்து, அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில் நாளை தொடங்கும் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில், இந்திய ராணுவம் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.