குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மற்றும் திரிபுராவில் போராட்டம் வெடித்துள்ளன.
ஹைலைட்ஸ்
- வடகிழக்கு மாநிலங்களில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது
- நிலைமையை எதிர்கொள்ள கூடுதல் படைகள் தயார் நிலையில் உள்ளன
- முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
New Delhi: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் திரிபுராவில் 5 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் அளித்துள்ள தகவலின்படி கஞ்சான்பூர் மற்றும் மனு ஆகிய பகுதிகளில் 2 கம்பெனிப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அசாமின் பொங்கைகானிலும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஒரு கம்பெனிப் படையில் 70 வீரர்களும், அதற்கு தலைமையேற்கும் கேப்டன்களும் இருப்பார்கள். நிலைமையை கள தளபதிகள் தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணித்து வருகின்றனர்.
அசாமில் திப்ருகர் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படையினர் பதற்றம் நிறைந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ஊரடங்கு உத்தரவுகள் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.
ஏறக்குறைய 5 ஆயிரம் துணை ராணுவத்தினர் வடகிழக்கு பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு இடங்களில் குடியுரிமை மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
முஸ்லிம்கள் அல்லாத ஆப்கன், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் இருந்த வந்தவர்களுக்கு, அவர்கள் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தார்கள் என்றால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமையை குடியுரிமை திருத்த மசோதா வழங்குகிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வாரம் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை அறிமுகம் செய்தார். நீண்ட விவாதத்திற்கு பின்னர் நேற்று முன்தினம் மசோதா மக்களவையில் நிறைவேறியது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து வடகிழக்கு மாநில அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களை சந்தித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கையாக திருத்தப்பட்ட மசோதாவிலிருந்து அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அங்கு போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
மாநிலம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு மொபைல் இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ்.சேவைகளுக்கு திரிபுரா அரசு நேற்று தடை விதித்தருந்தது. செபாஜலா என்ற பகுதியில் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த 2 மாத குழந்தை உயிரிழந்தது.
தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, குடியுரிமை திருத்த மசோதாவில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. முன்னதாக, ப்ழங்குடியினர் அல்லாத கடைகளுக்கு தலாய் மாவட்டத்தில் தீ வைக்கப்பட்டதால் பரபரப்பை ஏற்பட்டது.
அசாம் மாநிலத்திலும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொந்தளித்த வன்முறையாளர்கள் சாலையில் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ரயில் தண்டவாளங்களில் போராட்டங்கள் நடந்ததால், சில ரயில்களின் இயக்கமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கல்வி நிலையங்கள், வங்கிகள், வர்த்தக மையங்கள், சந்தைகள் உள்ளிட்டவை அருணாசல பிரதேசத்தில் மூடப்பட்டிருந்தன. வாகன இயக்கமும் மிகக் குறைவாக காணப்பட்டது.
சுமார் 7 மணி நேர விவாதத்திற்கு பின்னர் திங்களன்று இரவு மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 334 வாக்குகளும், எதிராக 106 வாக்குகளும் விழுந்தன.