This Article is From Sep 11, 2018

புதிய ஆயுதங்கள் வாங்க ஆட்குறைப்பு… இந்திய ராணுவத்தின் பிளான் என்ன?

ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் மொத்த பட்ஜெட்டான 1.28 லட்சம் கோடி ரூபாயில், 83 சதவிகிதம், சம்பளம், தினம் ஆகும் செலவு மற்றும் பிற செலவுகளுக்கே சரியாக இருக்கிறது

ஆட்குறைப்பு யோசனை குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை என தகவல்

ஹைலைட்ஸ்

  • பழைய ஆயுதங்ளே அதிகம் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது
  • ராணுவ பட்ஜெட்டின் 17% தான் ஆயுதங்களுக்கு ஒதுக்கப்படுகிறது
  • ஆட்குறைப்பு குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை என தகவல்
New Delhi:

இந்திய ராணுவத்தில் தற்போது இருக்கும் ஆயுதங்கள் மிகவும் பழமையானதாக இருப்பதாகவும், அதற்கு மாற்றாக சீக்கிரமே புதிய ஆயுதங்கள் வாங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஏதுவாக சுமார் 1.5 லட்சம் பேர் அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் 5,000 கோடி ரூபாய் முதல் 7,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடியும் என்றும் கணிக்கப்படுகிறது.

தற்போது ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் மொத்த பட்ஜெட்டான 1.28 லட்சம் கோடி ரூபாயில், 83 சதவிகிதம், சம்பளம், தினம் ஆகும் செலவு மற்றும் பிற செலவுகளுக்கே சரியாக இருக்கிறது. வெறும் 17 சதவிகிதம் (26,826 கோடி ரூபாய்) தான் கேபிடல் செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது ராணுவத்துக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

அடுத்தடுத்த ஆண்டுகள் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் மூலம், கேபிடல் செலவுக்கு 31,826 கோடி ரூபாய் முதல் 33,826 கோடி ரூபாய் வரை திரட்டலாம் என்று ராணுவம் எதிர்பார்க்கிறது.

கடந்த மார்ச் மாதம் ராணுவத்தின் துணைத் தளபதி ஜெனரல் சரத் சந்த், ‘தற்போது ராணுவத்தின் இருப்பில் உள்ள ஆயுதங்களில் 68 சதவிகிதம் பழையதாகவும், 24 சதவிகிதம் தற்காலத்தை ஒத்து இருப்பதாகவும், 8 சதவிகதம் அதி தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளதாகவும் இருக்கின்றன. வெறும் 21,338 கோடி ரூபாய் பட்ஜெட் மட்டும் ஒதுக்குவது புதிய ஆயுதங்களை வாங்க போதாது’ என்று நாடாளுமன்ற குழுவில் முன்னர் தெரிவித்தார்.

மேலும் ராணுவ தரப்பிலிருந்து, ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்தும் தெரியபடுத்தப்பட்டு உள்ளதாம். அது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது ராணுவத்தில் வேலை பார்த்து வருபவர்களை பணி நீக்கம் செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் போது அந்த எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், ஆட்குறைப்பு நடவடிக்கை அமல் படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேர் ஓய்வு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே நான்காவது பெரிய ராணுவத்தை எப்படி இன்னும் திறன் உள்ளதாக மாற்றுவது என்பதை கண்டறிய 4 ராணுவ ஜெனரல்கள் அறிக்கை தயாரித்து வருகின்றனர். அந்த அறிக்கை, மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

.