Air Strike on Pakistan: நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
New Delhi: தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில் பிரதமர் மோடி (PM Modi) தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்த் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு, புல்வாமா சம்பவம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.
இந்திய விமானப்படையின் ஜெட் விமானங்கள், எல்லை தாண்டி இன்று அதிகாலை 3.30-க்கு தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 1,000 கிலோ எடைகொண்ட வெடிகுண்டுகள் அப்போது வீசப்பட்டன. இதில் 300-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதிகாலையில் நடைபெற்ற இந்த திடீர் அட்டாக், 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பாலகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் விமானப்படை குண்டுமழை பொழிந்துள்ளது.