ஜின்பிங் முகமூடி அணிந்து, அவரது பெயர் வடிவில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து அசத்தினர்.
தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, சென்னை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 2 ஆயிரம் பேர், ஜின்பிங் போன்று முகமூடியை அணிந்து வரவேற்றுள்ளனர்.
சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில் இருவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, இருதலைவர்களுக்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் பரத நாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், தேவராட்டம், கை சிலம்பம், மங்கள இசை உள்பட 12 வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக, சென்னை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 2 ஆயிரம் பேர், சீனாவின் தாய்மொழியான மாண்டரின் மொழியில் ஜி ஜின்பிங் பெயர் வடிவில், ஜின்பிங் போன்று முகமூடியை அணிந்து அமைத்த உருவாக்கம், தனித்துவமான வழியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018ல் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சிமாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.