சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Delhi: JNU Attack டெல்லியில் ஜவகர்லால் பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இன்று பாதுகாப்புக்காக அங்கு 700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கையில் லத்திக் கம்புகளுடன் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கைக் காக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி குண்டர்களை அடையாளம் காண சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் பதிவுகளின் ஸ்கிரின்ஷாட்டுகள், சிசிடிவி வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை பல்வேறு புகார்கள் குவிந்ததை அடுத்து, போலீசார் முதல்கட்ட தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு ஒப்படைத்துள்ளனர். எனினும், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கலவரம் மற்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டு பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜே.என்.யூ.வில் மாணவர் அமைப்பின் தலைவர் ஆய்ஷ் கோஷ் உள்பட 28 பேர் முகமூடி அணிந்த மர்ம நபர்களின் தாக்குதலால் காயம் அடைந்திருக்கின்றனர். ஞாயிறன்று மாலை 2 மணிநேரமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது.