This Article is From Jan 02, 2020

நெல்லைக் கண்ணனைக் கைது செய்திருப்பது மிகப்பெரும் அநீதி: சீமான் கடும் கண்டனம்!

சமீபகாலமாக நெல்லை கண்ணனின் பா.ஜ.க கொள்கைக்கு எதிரான வலுவான வாதங்களும் பரப்புரைகளும் தான் இந்தக் கைதுக்குக் காரணம். மேடை பேச்சுகளுக்குக் கைதென்றால் பா.ஜ.கவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள். 

Advertisement
தமிழ்நாடு Edited by

மேடை பேச்சுகளுக்குக் கைதென்றால் பா.ஜ.கவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள். 

தமிழுக்காகவே வாழ்வினை அர்ப்பணித்த நெல்லைக் கண்ணனைக் கைது செய்திருப்பது மிகப்பெரும் அநீதி என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருநெல்வேயில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணனின் உரை ஒன்று சமூகவலைதளங்களில்
வைரலாக பரவியது.

அதில், நெல்லை கண்ணன் இரு சமூகங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டுவது போல் பேசியதாக அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து காவல்துறையினர் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். 

தொடர்ந்து, நெல்லை கண்ணனை கைதுசெய்ய வலியுறுத்தி நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், பாஜக தந்த தொடர் அழுத்தத்தை தொடர்ந்து, நேற்றிரவு பெரம்பலூரில் வைத்து நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, நெல்லைக் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பா.ஜ.க அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறச்சீற்றத்தை வெளிப்படுத்திய நெல்லை கண்ணனைக் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் ஒருசேர கட்டவிழ்த்துவிடப்பட்டு மக்கள் துயருற்று நிற்கும்போது அம்மக்கள் பக்கம் நின்று அவர்களின் உரிமைக்காகக் குரலெழுப்புவதே அறம். 

அந்நெறிப்படி நின்று போராடிய நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலித்த அவரின் பேச்சை வன்முறையைத் தூண்டுவதாக உள்நோக்கம் கற்பிப்பது மடமைத்தனமானது.

Advertisement

சமீபகாலமாக நெல்லை கண்ணனின் பா.ஜ.க கொள்கைக்கு எதிரான வலுவான வாதங்களும் பரப்புரைகளும் தான் இந்தக் கைதுக்குக் காரணம். மேடை பேச்சுகளுக்குக் கைதென்றால் பா.ஜ.கவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள். 

மாணவர்களை நோக்கி குண்டுகள் வருமென்றும், உயர் நீதிமன்றத்தை இழித்துரைத்த எச்.ராஜா, ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர், முதல்வரையும், துணை முதல்வரையும் ' ஆண்மையற்றவர்கள் என விமர்சித்த குருமூர்த்தி, வருணாசிரமத்தை ஆதரித்துச் சாதிவெறியோடு பேசிய வெங்கடகிருஷ்ணன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தரைத் தாக்கிய தீட்சிதர் தர்ஷன் இவர்களையெல்லாம் கைது செய்யத் துணிவற்ற தமிழக அரசு, தமிழுக்காகவே வாழ்வினை அர்ப்பணித்த நெல்லைக் கண்ணனைக் கைது செய்திருப்பது மிகப்பெரும் அநீதி என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement