தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா கைது, பாசிச நடவடிக்கை என்றும், நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுவதற்கு இது தெளிவான ஆதாராம் எனவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மேலும், 2019-ம் ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல், பாசிச பா.ஜ.கவுக்கும், ஜனநாயகத்தை முன்னிறுத்தும், முன்னேற்ற படைகளுக்குமான போட்டியாக இருக்கும், என்றும் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
கோஷம் எழுப்பிய பெண் மீது, கட்டுப்படுத்த முடியாத அகந்தை கொண்டு தமிழிசை, புகார் அளித்ததால், அந்த மாணவிக்கு 15 நாள் நீதி மன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது, என்றார் அவர்.
“ இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், வேறு என்ன?” என்று திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். “ இது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்ல, அரசியல் அமைப்பு, ஜனநாயகம் மற்றும் இந்தியா என்னும் கேட்பாட்டின் மீதான தாக்குதல்” என்றார் அவர்.
5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டிய திவாரி, இந்த வாரத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் என சோபியா சம்பவத்தை கூறினார்.
“ இது ஒரு வடிவமாகவே 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல், ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலா மரணத்துக்கு காரணமான சம்பவங்கள், ஐ.ஐ.டி மெட்ராஸில் இருந்த பெரியார் மாணவர் வாசிப்பு குழுவின் அங்கீகாரத்தை ரத்து செய்தது, காஷ்மீரின் திரைப்படம் ஒன்றை ஐ.ஐ.டி டெல்லியில் திரையிட அனுமதி மறுத்தது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயர் சேர்க்க நினைப்பது”என ஒவ்வொரு சம்பவமும், பாசிச சம்பவங்களை மையமாக கொண்டுள்ளதாக கூறுகிறார் திவாரி.
“ பா.ஜ.கவை கேள்வி கேட்டால், நீங்கள் ஆன்டி-இந்தியன். அரசை கேள்வி கேட்டால் நீங்கள் தேச துரோகி. இப்படிப்பட்ட இந்தியாவா நமக்கு தேவை?” என்று கேள்வி எழுப்புகிறார்
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)