This Article is From Sep 14, 2018

அமெரிக்காவில் சென்னை தம்பதிக்கு நேர்ந்த கொடுமை

சில வாரங்களுக்கு முன்பு 6 மாத குழந்தை ஹிமிஷாவை குழந்தைகள் பாதுகாப்பு சேவை மைய அதிகாரிகள் பெற்றோரிடமிருந்து பிரித்து தங்கள் வசம் வைத்துள்ளனர்.

தம்பதிகளி பிரகாஷ் சேட்டு மற்றும் மாலா பன்னீர் செல்வம் ஆகியோர் ஃபோர்ட் லாடர்டேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஹைலைட்ஸ்

  • குழந்தைக்கு செலவுமிக்க பரிசோதனை செய்ய பெற்றோர் மறுத்தனர்
  • ஜாமீன் தொகையை ஆன்லைனில் நண்பர்கள் திரட்டினர்
  • அமெரிக்க அதிகாரிகளை வெளியுறவு அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளது
Chennai:

சென்னையை சேர்ந்த பிரகாஷ் சேட்டு மற்றும் மாலா பன்னீர் செல்வம் தம்பதியினர் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பாக அவர்களது 6 மாத பெண் குழந்தைக்கு இடது கையில் காயம் ஏற்பட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ப்ரோவர்டு கவுன்டியில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அதிக செலவுள்ள சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதற்கு பதிலளித்த தம்பதியினர் கூடுதல் செலவுள்ள சோதனைகளை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

இதையடுத்து மருத்துவர்கள் அளித்த புகாரின்பேரில் தம்பதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த வெள்ளியன்று சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமீனில் விடுவிப்பதற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ. 1.4 கோடி) நிர்ணயிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கூறும்போது, “ பிணைத் தொகை 30 ஆயிரம் டாலர் (ரூ. 21 லட்சம்)-ஆக குறைக்கப்பட்டு இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினர். இந்த தொகையை ஆன்லைன் மூலமாக நிதி திரட்டி தம்பதியின் நண்பர்கள் அளித்துள்ளனர்.

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு 6 மாத குழந்தை ஹிமிஷாவை அமெரிக்காவின் குழந்தைகள் பாதுகாப்பு சேவை மைய அதிகாரிகள் பெற்றோரிடமிருந்து பிரித்து தங்கள் வசம் வைத்துள்ளனர்.

இந்தசம்பவம் தொடர்பாக பன்னீர் செல்வத்தின் தாயார் மல்லிகா என்.டி.டீ.வி.க்கு அளித்த பேட்டியில், பச்சிளம் குழந்தையை அவரது சொந்த பெற்றோரிடமிருந்து பிரித்து வைப்பது என்பது பெரும் பாவம். முறைப்படி குழந்தையை பாட்டியான என்னிடத்தில்தான் அவர்கள் ஒப்படைத்திருக்க வேண்டும் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

அதே நேரத்தில், சேட்டுவும் அவரது மனைவியும் குழந்தைக்கு பரிசோதனை செய்வதை தடுத்ததாகவும், குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை குழந்தையின் மீது கவனக்குறைவாக இருந்தார்கள் என்ற கண்ணோட்டத்தில் மருத்துவமனை நிர்வாகம் பார்த்துள்ளது. அதன்பின்னர்தான் குழந்தை பாதுகாப்பு சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்க துணைத் தூதரகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனிப்பட்ட நபர்கள் தொடர்பான விசாரணை குறித்து எங்களால் பதிலளிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

அமெரிக்காவை பொறுத்தவரை குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் மிகக் கடுமையாக உள்ளன. இதில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான பெற்றோர் சிக்கியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 2012-ல் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 18-மாத குழந்தைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதனை சரியாக பெற்றோர் கவனிக்காததால், குழந்தையை பெற்றோரிடமிருந்து அமெரிக்க அதிகாரிகள் பிரித்துச் சென்றனர். பின்னர் ஓராண்டு கழித்துதான் பெற்றோரிடம் குழந்தையை திருப்பி அளித்திருக்கிறார்கள்.

.