மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டத்தில் கைது: காவல் ஆணையர் எச்சரிக்கை
மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு ஏற்கெனவே தடை இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை நெரித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு பெரம்பூரில் தந்தையுடன் பைக்கில் சென்ற அஜய்(5) என்ற சிறுவன் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்து துடிதுடித்து உயிரிழந்தான். இந்த சம்பவம்தான் தமிழகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அந்த சமயத்தில், மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரித்த தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது. அதேபோல் விற்பனையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டது. எனினும், சென்னையில் மாஞ்சா நூலால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் வந்தது.
இதனிடையே இந்த ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு வியாசர்பாடியை சேர்ந்த பகீர் பாஷா என்பவர் மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து காயம் ஏற்பட்டது. தொடர்நது, எம்.கே.பி. நகரில், மாஞ்சா நூலில் பட்டம் பறக்கவிட்டிருந்த தினேஷ் குமார் என்பவரை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட மேலும் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 16ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.