இங்கிலாந்து(England) போலீசார் தாமதமாக விசாரணை நடத்தியதாக இந்திய வம்சாவளியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
London: இங்கிலாந்து(England) தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியினரை குடும்பத்துடன்
எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மயூர் கர்லேகர் தனது மனைவி ரிது மற்றும் 2 குழந்தைகளுடன் லண்டனில்(London)
வசித்து வருகிறார். தென்கிழக்கு லண்டனின் போர்க்வுட் பார்க் அருகே
அவர்களது இல்லம் உள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று இரவு, கர்லேகரும் அவரது குடும்பத்தினரும் நன்றாக
தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீட்டை
தீயிட்டு கொளுத்தி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த காட்சிகள்
சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த காட்சியை கண்ட பக்கத்து வீட்டினர், கர்லேகரை உஷார்படுத்தி அவரது
குடும்பத்தை காப்பாற்றினர். இதுகுறித்து லண்டன் போலீசார் கூறும்போது,
வெறுப்புணர்வு காரணமாக இந்த குற்றச் செயல் நடந்திருக்கிறது. விசாரணை
நடத்தி வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றனர்.
கர்லேகர் கூறும்போது, அதிர்ஷ்டவசமாக எங்களை பக்கத்து வீட்டினர் எழுப்பி
விட்டனர். வீட்டின் சில பகுதிகள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. என் மகனின்
பெட்ரூமுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்தபோது அவன்
நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் என்று தெரிவித்தார்.
43 வயதாகும் கர்லேகர் டிஜிட்டல் கன்சல்டன்டாக பணியாற்றி வருகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவலி அவரது சொந்த ஊராகும்.