சட்டப்பிரிவு 370-ஐ சார்ந்தது சட்டப்பிரிவு 35A
New Delhi: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ-வை நீக்குவதாக உறுதி அளித்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காஷ்மீரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வந்தனர். இதனால், அங்கு கடும் பதற்றம் நீடித்து வந்தது. தொடர்ந்து, முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றம் கூடியது, உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சட்டப்பிரிவு 35ஏ சொல்வது என்ன?
1954 ஆம் ஆண்டு, மத்திய அரசின் அறிவுரையின் பேரில் அப்போதைய குடியரசு தலைவர் சட்டபிரிவு 35ஏ வை உருவாக்கி ஆணை பிறப்பித்தார். சட்டபிரிவு 35ஏ ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ப்ரேத்யேக சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது, மாநிலத்தின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதை தீர்மானிக்கவும், அவர்களுக்கு சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கவும் அதிகாரம் அளிக்கிறது.
இந்த சட்டம் இயற்றப்பட்ட போது, மாநிலத்தில் இருந்தவர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாகவும், அல்லது மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்கள் நிரந்திர குடியுரிமை பெற்றவர்களாக கருதப்படுகின்றனர். அவர்களால் மட்டுமே அம்மாநிலத்தில் சொத்துகளை வாங்க முடியும்.
சட்டப்பிரிவு 35ஏ-படி, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கு சொத்து வாங்க முடியாது, அரசு வேலை கிடைக்காது. ஜம்முகாஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெற்ற பெண் வேறு மாநிலத்தை சேர்ந்தவரையோ அல்லது நிரந்தர குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படாது. அந்த பெண்ணின் சொத்திலும் உரிமை கொண்டாட முடியாது.
இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இது நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படாமல், குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
சட்டபிரிவு 35ஏ நாடாளுமன்றத்திடமே கொண்டு வரப்படவில்லை என்பதால் அரசமைப்பின் சட்டத்திற்கே எதிரானது என முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து வந்தார்.