கடந்த ஆண்டு மே மாதம், சிறுநீர் மாற்று சிகிச்சை செய்து கொண்டார் ஜெட்லி. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந்திருக்கும் மத்திய அரசுக்குப் பெரும் பலமாக திகழ்ந்து வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 66 வயதில் காலமானார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அவர் இயற்கை எய்தினார். பாஜக-வுக்கு இந்த மாதத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது பெரிய இழப்பு இது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி, முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், காலமானார்.
சுஷ்மாவைப் போலவே, வழக்கறிஞராக இருந்த அரசியல்வாதியாக உருமாறியவர் ஜெட்லி. சுஷ்மாவைப் போலவே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் நட்பு பாராட்டினார் ஜெட்லி.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014 ஆம் ஆண்டு அமைந்த மத்திய அரசின் மிக முக்கிய நிர்வாகியாக இருந்தவர் ஜெட்லி. அரசியல் உத்திகள் வகுப்பதில் வல்லவராக திகழ்ந்தவர்.
மோடி அரசின் சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கும் அவர் தொடர்ந்து ஆதரவுக் குரல் கொடுத்து வந்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, 2019 ஆம் ஆண்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது ஜெட்லி, ‘உடல்நலக் குறைவு காரணமாக என்னால் எந்த அரசு பொறுப்பையும் ஏற்க முடியாது' என்று வெளிப்படையாக கடிதம் எழுதினார்.
தனது ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்ததாகவும், அதை சரிசெய்ய போதுமான நேரம் தேவைப்படுவதாகவும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அவர் விளக்கியிருந்தார்.
அதே கடிதத்தில் ஜெட்லி, அரசுக்கும் கட்சிக்கும் உழைக்கும் வகையில் அதிகாரபூர்வமற்ற பொறுப்புகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் சூசகமாக தெரிவித்திருந்தார்.
கடந்த பல மாதங்களாகவே பொது இடங்களுக்கு வருவதையும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து வந்தார் ஜெட்லி. தொடர்ந்து வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களின் மட்டுமே தனது கருத்துகளை பகிர்ந்து வந்தார். பாஜக, எப்போதெல்லாம் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறதோ, அப்போதெல்லாம் தீர்வுகளை முன்வைத்தவர் ஜெட்லி. அரசின் சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கும் அவர் தொடர்ந்து ஆதரவுக் குரல் கொடுத்து வந்தார்.
சுஷ்மா சுவராஜைப் போலவே, அருண் ஜெட்லியும் எல்.கே.அத்வானியுடன் நெருக்கமாக இருந்தார்
2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் அமைந்த்த மத்திய அரசின் காபினட்டில் சேர்க்கப்பட்ட அருண் ஜெட்லிக்கு, நிதித் துறை, ராணுவத் துறை மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சகப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மே மாதம், சிறுநீர் மாற்று சிகிச்சை செய்து கொண்டார் ஜெட்லி. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஜெட்லி, கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய மறுத்துவிட்டார்.
வழக்கறிஞர்கள் அதிகமிருக்கும் குடும்பத்தில் பிறந்த ஜெட்லி, டெல்லியின் ஸ்ரீ ராம் கல்லூரியில் சட்டப் படிப்புப் பயின்றார். மாணவராக இருந்தபோதே, பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் சேர்தார். அதுவே ஜெட்லியின் அரசியல் பயணத்துக்கு வித்திட்டது.
1975- 1977 ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. அப்போது அதற்கு எதிராக தீர்க்கமாக போராடி வந்தவர் ஜேபி என்னும் ஜெயப்பிரகாஷ் நாரயண். அவருடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த ஜெட்லியும் கைது செய்யப்பட்டார்.
சுஷ்மா சுவராஜைப் போலவே, அருண் ஜெட்லியும் எல்.கே.அத்வானியுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், நரேந்திர மோடியுடனான அவரது நட்புதான் டெல்லி அரசியலில் குறிப்பிடத்தக்க உயரத்தை அடையவைத்தது.
ராஜ்யசபா உறுப்பினராக இருந்த ஜெட்லி, 2014 ஆம் ஆண்டு, பஞ்சாபின் அம்ரிஸ்டரில் போட்டியிட்டார். அப்போது மோடி அலை இருந்தபோதும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் ஜெட்லி.
கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார் ஜெட்லி. டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் அவர் இருந்தார்.