This Article is From Oct 06, 2018

ட்வீட் போடுவதால் பெட்ரோல் விலையை குறைக்க முடியாது - எதிர்க்கட்சிகளை விளாசும் ஜெட்லி

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தை பேசும்போது எதிர்க்கட்சியினர் ட்வீட் போடுகிறார்கள், டிவியில் பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் பிரச்னையை தீர்க்க அவர்களிடம் விஷயம் இல்லை என்கிறார் ஜெட்லி

ட்வீட் போடுவதால் பெட்ரோல் விலையை குறைக்க முடியாது - எதிர்க்கட்சிகளை விளாசும் ஜெட்லி

சர்வதேச காரணங்களால் பெட்ரோல் விலை உயர்ந்திருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

New Delhi:

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தொடங்கிய விலையேற்றம், இன்றுவரை ஓயவில்லை. இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. லாரி உரிமையாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்ததால் மத்திய அரசு ஒரு உறுதியான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலை மீதான உற்பத்தி வரியில் இருந்து ரூ. 1.50-யை குறைத்துக் கொள்வதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 1-யை குறைத்துக் கொள்ளும் என்றும் அறிவித்தார். இதனால் மத்திய அரசின் நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 குறைந்தது.

இதேபோன்று பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில அரசு சார்பாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யப்பட்டது.

இதன்பின்னரும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் அருண் ஜெட்லி பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது -
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்திக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இந்த பிரச்னைகளை எதிர்க்கட்சி தலைவர்களைப் போன்று வெறும் ட்வீட்-களை போட்டுக் கொண்டும், டிவியில் பேட்டி அளித்துக் கொண்டும் தீர்த்து விட முடியாது. இது கொஞ்சம் சீரியஸான பிரச்னை. இன்னும் சொல்லப்போனால், ராகுல் காந்தியும், அவரது கூட்டணி கட்சியினரும்தான் ட்வீட் செய்கின்றனர், டிவியில் பேட்டி அளிக்கின்றனர். இதனால் சாமானிய மக்களுக்கு ஏதேனும் பலன் ஏற்படுமா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

.