This Article is From Aug 24, 2019

அருண் ஜெட்லி மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு: அமித்ஷா

அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து, கவலைக்கிடமாக இருந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

அருண் ஜெட்லி மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு: அமித்ஷா

அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்ட்.9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அருண் ஜெட்லி மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது ட்வீட்டர் பதவில் அவர் கூறியதாவது, அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. நான் கட்சியின் மூத்த தலைவரை மட்டும் இழந்துவிடவில்லை, எனது குடும்ப உறுப்பினரை இழந்துள்ளேன். பல ஆண்டுகளாக என்னை வழிநடத்தியவர் அருண் ஜெட்லி, அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்று அவர் கூறியுள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. 

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். 

இந்நிலையில், தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது, இதில், புதிதாக அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொடர விரும்பவில்லை என அருண் ஜெட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அதில் அனைத்து பொறுப்புகளிருந்தும் சிறிது காலம், விலகி இருக்க விரும்புகிறேன். இது எனது சிகிச்சையிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த உதவும் என்று அவர், கோரிக்கை விடுத்திருந்தார். 

.