மூச்சுத்திணறல் காரணமாக அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
New Delhi: டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அருண் ஜெட்லியின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மருத்துவ சிகிச்சைக்கு அருண் ஜெட்லி ஒத்துழைப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லியை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, கார்டியோ-நியூரோ மையத்தின் பலதரப்பட்ட மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, புதிதாக அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொடர விரும்பவில்லை என அருண் ஜெட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அதில் அனைத்து பொறுப்புகளிருந்தும் சிறிது காலம், விலகி இருக்க விரும்புகிறேன். இது எனது சிகிச்சையிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த உதவும் என்று அவர், கோரிக்கை விடுத்திருந்தார்.