மல்லையா விவகாரம் குறித்து பத்திரிகையாளர் ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய காட்சி
ஹைலைட்ஸ்
- ஜெட்லி-மல்லையா சந்திப்பை காங். எம்.பி. நேரில் பார்த்தார் – ராகுல்
- மல்லையாவுடனான சந்திப்பு பற்றி ஜெட்லி விளக்க வேண்டும் – ராகுல்
- கடன் பிரச்னையில் 2016 மார்ச்சில் வெளிநாடு சென்றார் மல்லையா
New Delhi: வெளிநாடு செல்வதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தான் சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியதை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்தார். இந்த நிலையில் இருவரும் நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசியதை தான் பார்த்ததாக காங்கிரஸ் எம்.பி. பி.எல். புனியா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “அருண் ஜெட்லி பொய் சொல்கிறார் என்றும் மல்லையாவை அவர் சந்தித்தார் என்றும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மல்லையா விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அருண் ஜெட்லியை சந்தித்து மல்லையா பேசியுள்ளார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு கிரிமினலை அவர் ஏன் சந்தித்து பேச வேண்டும். மல்லையாவுடன் அவர் என்ன பேசினார் என்பதை ஜெட்லி தெரிவிக்க வேண்டும் என்றார்.
மல்லையாவை இந்தியா கொண்டு வருவது தொடர்பான வழக்கில் டிசம்பர் 10-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது
இதையடுத்து பேசிய காங்கிரஸ் எம்.பி. பி.எல். புனியா, வெளிநாடு பறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அதாவது மார்ச் 2016-ல் மல்லையா – அருண் ஜெட்லி சந்திப்பு நாடாளுமன்றத்தில் நடந்தது. அதனை நான் நேரில் பார்த்தேன். அவர்கள் இருவரும் பென்ச்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு முடிந்ததும் மல்லையாதான் முதலில் கிளம்பினார். இதுபற்றி நான் மார்ச் 2-ம் தேதியே பேட்டியளித்தேன். அதற்கு அடுத்த நாளே மல்லையா வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். நான் பொய் கூறுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நாடாளுமன்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யுங்கள். அப்படி என்மீது தவறு இருந்தால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.
ரூ. 9000 கோடி கடன் மோசடி வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று பேட்டியளித்த மல்லையா, நான் வெளிநாடு தப்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை. அந்த நேரம் ஜெனிவாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்தது. நான் இந்தியா விட்டு கிளம்பும் முன்பு அருண் ஜெட்லியை சந்தித்தேன். வங்கிக் கடனை நான் செலுத்தி விடுவதாக நான் அவரிடம் கூறினேன். நடந்த உண்மை இதுதான் என்றார்.
தன்னை சந்திக்க மல்லையாவுக்கு அப்பாயின்ட்மென்டே கொடுக்கவில்லை என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
இதனை மறுத்த அருண் ஜெட்லி தனது ஃபேஸ் புக் பக்கத்தில், “ 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் மல்லையாவை சந்திப்பதற்கு நான் எந்தவொரு அப்பாயின்ட்மென்டும் வழங்கவில்லை. இதனால் அவர் என்னை சந்தித்தார் என்ற கேள்வியே எழக்கூடாது. ஒரு எம்.பியாக இருந்தபோதிலும் மல்லையா தனது சலுகைகளை தவறாக பயன்படுத்தினார். ஒருமுறை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறி எனது அறையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மல்லையா என்னை மறித்து, கடனை திரும்ப செலுத்த எனக்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டு, வங்கிகளில் செலுத்த வேண்டிய கடனை செலுத்துமாறு அவரிடம் நான் கண்டிப்புடன் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.