பெட்ரோல், டீசல் விலையை குறைத்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அருண் ஜெட்லி
New Delhi: கடந்த சில வாரங்களாக நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்தது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த விவகாரத்தில் எரிபொருள் விலை யேற்றத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத் தொடங்கின.
இந்த நிலையில் இன்று அதிரடி நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50 குறைத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேட்டிளித்த அவர், “ மத்திய அரசைப் போல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்ப உள்ளேன். இதனை ஏற்று மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது. அனைத்து மாநில அரசுகளுக்கும் இது ஒரு சவால். மத்திய அரசு ரூ.2.50 குறைத்தது போல மாநில அரசுகளும் வாட் வரியில் ரூ. 2.50 குறைப்பு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக எரிபொருள் உற்பத்தி வரியில் ரூ. 1.50-யை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1-ம் குறைத்தன. பாஜக ஆளும் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அறவிப்பு வெளியிட்டுள்ளன.
குறிப்பாக மகாராஷ்டிராவில் மாநில அரசு பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ. 2.50 குறைத்துள்ளது. இதனால் நடப்பில் உள்ளதை விட பெட்ரோலுக்கும், டீசலுக்கும் ரூ. 5 குறையும்.