New Delhi: உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களாக ஓய்வில் இருந்த அருண் ஜெட்லி, மீண்டும் நிதி அமைச்சராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து வெளிவந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அருண் ஜெட்லி, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஓய்வெடுக்க ஆரம்பித்தார். அறுவை சிகிச்சை மே மாதம் 14 ஆம் தேதி நடந்தது.
ஜெட்லி ஓய்வு பெற்றதை அடுத்து, ரயில்வே துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், இடைக்கால மத்திய நிதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதேநேரத்தில், ஜெட்லி, தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தி வந்தார். அதைப் போலவே, பல நிகழ்ச்சிகளில் வீடியோ மூலம் பங்கெடுத்தார். இதனால் எதிர்கட்சிகள், ‘யார் நிதி அமைச்சராக இருக்கிறார்?’ என்று விமர்சனங்களும் வைத்தன.
இந்த மாத தொடக்கத்தில் ராஜ்யசபா துணை சபாநாயகர் தேர்தல் நடந்தது. அப்போது, வாக்களிப்பதற்காக அருண் ஜெட்லி வெகு நாள் கழித்து நாடாளுமன்றத்துக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வில் இருந்த போதும், ஜெட்லி தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார். ஜி.எஸ்.டி வரி முறை குறித்தும், எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வேலைகளையும் அவர் தொடர்ந்து செய்து வந்தார்.