பிப்ரவரி மாதம் 1-ம்தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அருண் ஜெட்லி
New Delhi: உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்ய விரைவில் நாடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அருண் ஜெட்லிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையடுத்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அவ்வப்போது அமெரிக்கா சென்று வருகிறார். தற்போது அவர் மருத்துவ பரிசோதனையில் இருக்கிறார்.
இதனால் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்வாரா அல்லது வேறு யாரேனும் செய்வார்களா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்த நிலையில் அவர் விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் அவரே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் மிக முக்கியமான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகள் வழங்கப்படலாம்.
வருவான வரி உச்ச வரம்பில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டுவரை பிப்ரவரி மாதத்தின் கடைசியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
இதனை நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 2017 முதல் பிப்ரவரி 1-ம்தேதியாக மாற்றியுள்ளார். பட்ஜெட் தொடர்பாக நாடாளுமன்றம் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம்தேதி வரையில் நடைபெறும்.
மொத்தம் 10 அமர்வுகள் இருக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.