கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
ஹைலைட்ஸ்
- டெல்லியில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் வேகம் அடைந்து வருகிறது
- ஜூலை இறுதிக்குள் 5.50 லட்சம்பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது
- மத்திய அரசு தேவையான உதவிகளை அளிக்கும் என கெஜ்ரிவாலிடம் அமித் ஷா உறுதி
New Delhi: தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், டெல்லி அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என அமித் ஷா கூறியதாக தெரிவித்துள்ளார்.
சுமார் 2 மாதகால பொது முடக்கத்திற்கு பின்னர், டெல்லியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு உயர்ந்திருப்பது பலருக்கும் நெருக்கடியை அளித்துள்ளது.
தற்போது டெல்லியில் 31 ஆயிரம்பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் 305 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை இறுதிக்குள் மாநிலத்தில் 5.50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இந்த முக்கியமான சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,675 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,008 பேர் குணம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் தனியார் மற்றும் 12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.