தனது அச்சமற்ற தன்மைக்காகவும், உண்மையை வெளிப்படையாக பேசும் குணத்துக்காகவும் பல முறை மிரட்டல்களுக்கு உள்ளாகியவர் ரவிஷ்.
New Delhi: இதழியல் துறையில், “குரலற்றவர்களின் குரலாக விளங்கியதால்” மிகவும் புகழ்பெற்ற மகசேசே விருதை வென்றுள்ளார் NDTV-யின் ரவிஷ் குமார். 2019 ஆம் ஆண்டிற்கான மகசேசே விருது வாங்கும் 5 பேரில் ரவிஷ் குமாரும் ஒருவர் ஆவார். மகசேசே விருது ஆசிய நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது. ரவிஷ் குமார், மகசேசே விருது வென்றதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலும் முன்னர் இந்த விருதை வென்றுள்ளார். மேலும் காங்கிரஸின் பிரியங்கா காந்தி வத்ரா, பகுஜன் சமாஜ்வாதியின் மாயாவதி ஆகியோரும் ரவிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு, கெஜ்ரிவால், தலைமைப் பண்புக்காக மகசேசே விருதை வென்றார். இந்நிலையில் அவர் ட்விட்டர் மூலம், “மகசேசே விருதை வென்றவர்களின் க்ளபுக்கு உங்களை வரவேற்கிறேன் ரவிஷ். மிகவும் இக்கட்டான காலத்தில் உங்களுடைய இதழியல் பணி தொடர்ந்து சிறக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மாயாவதி, ரவிஷுக்கு வாழ்த்து தெரிவிக்கையில், “NDTV-யின் மேனேஜிங் எடிட்டரும் நாட்டின் முன்னணி பத்திரிகையாளருமான ரவிஷ் குமார், 2019 மகசேசே விருதை வென்றதற்கு வாழ்த்துகள். நாட்டின் ஊடகங்கள் இதன் மூலம் ஊக்கம் பெற்று, ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் பயமின்றி பணிகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன்” என்றுள்ளார்.
“2019 மகசேசே விருதை வென்றுள்ள ரவிஷ் குமாருக்கு வாழ்த்துகள். உண்மையைச் சொல்லும், விமர்சனங்களை ஆக்கபூர்வமாக வைக்கும் பத்திரிகையாளருக்கு வாழ்த்துகள். அவரின் பொறுமையை மதிக்கிறேன்” என்று பிரயங்கா காந்தி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தவிர ரவிஷ் குமாருக்கு, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓப்ரியன், ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹுபூபா முப்டி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், நடிகர் மனோஜ் பாஜ்பாயி உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதழியல் பணிக்காக ரவிஷ் குமாருக்கு மகசேசே விருது வழங்கப்படுவதையொட்டி, அவர் குறித்து, “மிகவும் தொழில் ரீதியான இதழியலை, சமச்சீராகவும், அதே நேரத்தில் வேகமாகவும் வழங்குவதில் ரவீஷ் குமார் முன்னணியில் இருக்கிறார். மக்களின் குரலாக நீங்கள் மாறும்போது இதழியலாளராக மாறுகிறீர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரைச் சேர்ந்த கோ சுவே வின், தாய்லாந்தைச் சேர்ந்த அங்கனா நீலாபைஜித், பிலிப்பைன்ஸின் ராய்முண்டோ பஜின்டே, தென் கொரியாவின் கிம் ஜோங்-கி ஆகியோரும் இந்த ஆண்டு மகசேசே விருதை வென்றுள்ளனர்.
ரவிஷ் குமார், NDTV-யில் ‘ப்ரைம் டைம்' என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரின் நிகழ்ச்சி குறித்தும் மகசேசே விருது கொடுக்கும் அமைப்பு பேசியுள்ளது.
“மிகவும் குறைவான வெளிச்சம் பெற்ற பிரச்னைகள் குறித்தும், உண்மை வாழ்க்கை குறித்தும் எளிய மக்களின் நிலை குறித்தும் அவரது நிகழ்ச்சி பேசுகிறது. மக்கள் சார்ந்த இதழியல் பணியை அவர் முன்னெடுக்கிறார். தனது செய்தி அறையை ரவிஷ், ‘மக்களின் செய்தி அறை' என்கிறார். உண்மை தரவுகளையும் கட்டுப்பாட்டுடனுமான தொழில் முறை இதழியல் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்” என்று மகசேசே விருது அமைப்பு தெரிவித்துள்ளது.
பிகாரின் ஜித்வார்பூரில் வளர்ந்த ரவிஷ் குமார், 1996 ஆம் ஆண்டு முதல் NDTV-யில் பணிபுரிந்து வருகிறார். தனது அச்சமற்ற தன்மைக்காகவும், உண்மையை வெளிப்படையாக பேசும் குணத்துக்காகவும் பல முறை மிரட்டல்களுக்கு உள்ளாகியவர் ரவிஷ். டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை முடித்தார் ரவிஷ்.