ஆளுநர் வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர்
ஹைலைட்ஸ்
- நேற்று ஆளுநரை சந்திக்க சென்றுள்ளனர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியினர்
- கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவிக்காததால் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்
- 12 மணி நேரம் கடந்தும் தொடர்ந்து போராட்டத்தில் இருக்கின்றனர்
New Delhi: புது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திடீர் போராட்டம் குறித்து கெஜ்ரிவால், 'அரசு ரேஷன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அவர்கள் வீட்டுக்கே சென்று பொருட்கள் கொடுப்பது மற்றும் பல மாதங்களாக ஸ்டிரைக்கில் இருக்கும் டெல்லி ஐஏஎஸ் அதிகாரிகளை மீண்டும் பணிக்கு திரும்ப சொல்வது ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து டெல்லியின் துணை நிலை ஆளுநரை சந்திக்க வந்துள்ளோம். ஐஏஎஸ் அதிகாரிகள் சட்டப்படி ஸ்டிரைக்கில் இருக்க முடியாது. அவர்களுக்கு எந்த கோரிக்கையும் இல்லை. ஆனால், ஆளுநர் அலுவலகத்திலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் வேலைக்கு வர மறுக்கின்றனர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேறும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம்' என்றுள்ளார்.
நேற்று மாலை ஆளுநர் அனில் பைஜல் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினரை சந்தித்தார். அப்போது, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆளுநர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நேற்று வந்த ஆம் ஆத்மி கட்சியினர் 12 மணி நேரம் கடந்தும் இன்னும் ஆளுநர் வீட்டிலேயே தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை, `டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்னை மிரட்டப் பார்க்கிறார். அதேபோல, எந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் ஸ்டிரைக்கில் ஈடுபடவில்லை. அவர்களை யாரையும் மிரட்ட முடியாது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அவர்களின் கண்ணியமும் மரியாதையையும் காக்கப்படும். டெல்லியின் செயலாளர் மீது கடந்த பிப்ரவரி மாதம் அரசு குற்றம் சுமத்தியது. அதிலிருந்து ஆளுநர் மாளிகை நடவடிக்கையின் மீது டெல்லி அரசுக்கு நம்பிக்கை இல்லை. அது தான் இப்போதும் தொடர்கிறது' என்று விளக்கம் அளித்துள்ளது.
ஐஏஎஸ் விவகாரம் குறித்து கெஜ்ரிவால், 'பல ஐஏஎஸ் அதிகாரிகள் என்னிடம் நேரடியாக வந்து ஆளுநர் அலுவலகம் எங்களை மிரட்டுகிறது. பணிக்குத் திரும்பினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்கிறது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது ஆளுநர் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் படியே இது நடக்கிறது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து கெஜ்ரிவால் உள்ளிட்ட அவரது சகாக்கள் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வருவதால், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் அலுவலகத்துக்கு வெளியே குவிந்து வருகின்றனர்.