This Article is From Jan 20, 2020

வேட்புமனுத் தாக்கலை தவிர்த்து விட்டு பேரணியில் பிஸியான அரவிந்த் கெஜ்ரிவால்!!

வேட்பு மனுத்தாக்கல் செய்பவர்கள் அதற்கான ஆவணங்களுடன் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அதிகபட்சமாக மதியம் 3 மணிக்குள் ஆஜராக வேண்டும். ஆனால் இன்றைக்கு நடந்த பேரணியில் கெஜ்ரிவால் பிஸியாக இருந்ததால், அவரால் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு செல்ல முடியவில்லை.

வேட்புமனுத் தாக்கலை தவிர்த்து விட்டு பேரணியில் பிஸியான அரவிந்த் கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பத்தை கையில் ஏந்திச் செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்.

New Delhi:

டெல்லியில் தேர்தல் பிரசார பேரணியில் பிஸியானதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை அவர் அடைய முடியாததால் இந்த நிலை அவரக்கு ஏற்பட்டிருக்கிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு நாளைதான் கடைசி நாளாகும். 

வேட்பு மனுத்தாக்கல் செய்பவர்கள் அதற்கான ஆவணங்களுடன் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அதிகபட்சமாக மதியம் 3 மணிக்குள் ஆஜராக வேண்டும். ஆனால் இன்றைக்கு நடந்த பேரணியில் கெஜ்ரிவால் பிஸியாக இருந்ததால், அவரால் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு செல்ல முடியவில்லை. 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'இன்றைக்கு நான் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த மாபெரும் பிரசார பேரணியை விட்டு விட்டு செல்வதற்கு என்னால் முடியவில்லை. நான் நாளைக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்வேன்' என்று தெரிவித்தார். 

ஆம் ஆத்மியின் பேரணி வால்மிகி மந்திரில் இருந்து தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக, கெஜ்ரிவால் தொகுதியான புதுடெல்லி சட்டமன்ற தொகுதியின் வழியாக சென்று படேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறைவு பெறுகிறது. 

பேரணியின்போது கெஜ்ரிவால் அமர்ந்திருக்கும் வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்கிறது. கையில் கட்சியின் சின்னமான துடைப்பக் கட்டையை வீசியவாறு, கெஜ்ரிவால் ஆதரவு திரட்டுகிறார். அவருடன் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சென்றனர். 

'கடந்த 5 ஆண்டுகள் சிறப்பாக இருந்தன. தொடர்ந்து செல்லுங்கள் கெஜ்ரிவால்' என பொருள்படும் 'அச்சே பீட்டே பாஞ்ச் சால், லகே ரகோ கெஜ்ரிவால்' என்பது ஆம் ஆத்மியின் தேர்தல் பிரசார கொள்கை முழக்கமாக உள்ளது. 

2015 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 67 தொகுதிகளைக் கைப்பற்றியது. மொத்தம் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மிக்கு 54.3 சதவீதம் கிடைத்தன. 

நேற்றைய தினம் 10 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்தார். இலவச குடிநீர், மின்சாரம், உலகத்தரம் வாய்ந்த கல்வி, தூய்மையான சுற்றுச் சூழல் உள்ளிட்டவை இந்த வாக்குறுதிகளில் அடங்கும். 

இந்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஏமாற்று வேலை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. தோல்வி பயம் காரணமாக இத்தகைய வாக்குறுதிகளை அக்கட்சி அளிப்பதாக பாஜக கூறியுள்ளது.

டெல்லியில் பிப்ரவரி 8-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 11-ம்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

.