டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முழு மாநில அந்தஸ்து கோரி வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
New Delhi: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முழு மாநில அந்தஸ்து கோரி வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர், 'மார்ச் 1 முதல் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க உள்ளேன். டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன். நான் சாகவும் தயாராக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அவர் மேலும், 'மொத்த நாட்டுக்கும் ஜனநாயகம் இருக்கிறது. ஆனால் அது டெல்லிக்கு இல்லை. தேர்தல் மூலம் மக்கள்தான் டெல்லி அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், டெல்லி அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லை. எனவே, மார்ச் 1 முதல் முழு மாநில அந்தஸ்து கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்' என்றுள்ளார்.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றம், ‘டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால், அதை மத்திய அரசுதான் விசாரிக்க வேண்டும். மாநில அரசுக்கு உரிமை கிடையாது' என்று தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்துதான் கெஜ்ரிவால் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். மேலும் நீதிமன்றம், ‘டெல்லியைப் பொறுத்தவரை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் ஒற்றுமை வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கியது.
உத்தரவை அடுத்து பேசிய கெஜ்ரிவால், ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது. இது குறித்து எனது தலைமையிலான அரசாங்கள்ம மேல் முறையீடு செய்யும்' என்றார்.
டெல்லி ஒரு யூனியன் டெரிட்டரி. எனவே, அதற்கு அதிகார விஷயத்தில் முழு அந்தஸ்து கிடையாது. அங்கு நில உரிமை, சட்ட ஒழுங்கு மற்றும் காவல் துறையை மத்திய அரசுதான் நிர்வகிக்கும்.