என்னால் குடியுரிமை சட்ட திருத்தத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் கெஜ்ரிவால்.
New Delhi: குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு முதலில் வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், குடியுரிமை சட்ட திருத்தம் அவசியமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்து கெஜ்ரிவாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இந்த சட்டத்தை நாடாளுமன்றம்தான் நிராகரிக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே முறையை டெல்லி அரசு பின்பற்றுமா என்று கெஜ்ரிவாலிடம் கேட்கப்பட்டபோது, 'சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலோ, நிறைவேற்றாமல் போனாலோ அது இந்த சட்டத்தை பாதிக்காது. இந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் நிராகரிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றமும் இந்த சட்டத்தை நிராகரிக்க வேண்டும். சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை நாங்கள் நிராகரித்து விட்டால், இது நிறைவேறாமலா இருக்கப் போகிறது. இதனை நாடாளுமன்றம்தான் நிராகரிக்க வேண்டும்' என்று பதில் அளித்தார்.
நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பதில் அளித்த கெஜ்ரிவால், இந்த நேரத்தில் இந்த சட்டத்துடைய அவசியம் என்ன என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டியில், 'பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மீது இவ்வளவு அக்கறையாக மத்திய அரசு உள்ளது. இந்தியாவில் உள்ள இந்துக்களையும் மத்திய அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். எனக்கு இது புரியவில்லை. பொருளாதாரம் மந்தமாக உள்ளது. வீடு இல்லை, வேலையில்லை. இந்த சூழலில் 2 கோடி பாகிஸ்தான் இந்துக்களுக்காக மத்திய அரசு திட்டம் கொண்டு வருகிறது. இந்த சட்டத்திற்கு இப்போது என்ன தேவை ஏற்பட்டது?. முதலில் இந்தியாவை கவனியுங்கள். பின்னர் எல்லோருடைய தேவையை நிறைவேற்றுவோம்' என்று பதில் அளித்தார்.
குடியுரிமை சட்ட திருத்தம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசத்திலிருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது. இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியும் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்த சட்டம் சரி என நியாயப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பாஜக சார்பாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ராஜஸ்தானில் நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த சட்டம் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பாதிக்கும் என்று தெரிவித்த கெஜ்ரிவால், இருவரையும் வெளியேற்றுவதற்கு வகை செய்யும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு என்.ஆர்.சி. தொடர்பாக தற்போது விவாதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார். முன்பு என்.ஆர்.சி. குறித்து இப்போது திட்டம் ஏதும் இல்லை என்று அமித் ஷா தெரிவித்திருந்தார். இதனை கிண்டல் செய்த கெஜ்ரிவால், இப்போது இல்லாவிட்டால் பின்னர் எப்போது என்.ஆர்.சி. குறித்து அமித் ஷா பேசப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளித்த கெஜ்ரிவால் அதற்கு உதாரணமாக, 'என்னை பீகார் அல்லது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் சந்திக்கிறார். அவரிடம் பிறப்பு சான்றிதழ் இருக்கிறதா என்று நான் கேட்க, அவர் இல்லை என்கிறார். அவரது பெற்றோரிடமும் பிறப்புச் சான்றிதழ் இல்லை. இப்போது நான் அவர்களிடம் நீங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்' என்று விளக்கம் அளித்தார்.