டெல்லி சட்டமன்ற தேர்தல் 2020 : செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
New Delhi: டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு 3 நாட்களே உள்ள நிலையில், பாஜகவினருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சவாலை விடுத்துள்ளார். நாளை மதியம் 1 மணிக்குள் முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ள அவர், பாஜக முதல்வர் வேட்பாளரிடம் எத்தகைய விவாதத்திற்கு தான் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
இவ்வாறு முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்காவிட்டால் மீண்டும் ஒரு செய்தியாளர்களை சந்திப்பை ஏற்படுத்துவேன் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தான்தான் என்று கூறியுள்ள அவர், டெல்லி வாக்காளர்களிடம் இருந்து நிரப்பப்படாத காசோலையை அமித் ஷா எதிர்பார்ப்பதாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் பேசியதாவது-
டெல்லியில் தேர்தல் வரும்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பேன் என்று அமித் ஷா கூறியிருந்தார். டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்பினால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று வாக்காளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஒருவேளை கல்வியறிவில்லாத, தகுதியில்லாத ஒருவரை அமித் ஷா முதல்வர் ஆக்கினால், அது டெல்லி மக்களுக்கு செய்த துரோகமாக கருதப்படும்.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
டெல்லி தேர்தலையொட்டி அமித் ஷாவுக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே வார்த்தை மோதல் வலத்துள்ளது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமாறு பாஜகவை கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பெரும்பாலான தேர்தல்களில் பாஜக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக்குறியும், மத்திய அரசின் சாதனைகளை தெரிவித்தும் வாக்குகளை சேகரிக்கிறது.
உத்தரப்பிரதேச தேர்தலிலும்கூட கட்சியின் முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்கவில்லை. தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பின்னர்தான், யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக வளர்ச்சியை கொண்டு வரும் என்பதற்காக மக்கள் வாக்களித்தனர் என்றும், வலது சாரி அமைப்பின் தலைவரான யோகி ஆதித்யநாத்தை முதல்வராக ஆக்கியது மக்களுக்கு பாஜக செய்த நம்பிக்கை துரோகம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக விமர்சிக்கிறார். புத்தாண்டு தினத்தன்று, பாஜகவின் 7 முதல்வர் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.
அந்த 7 பேர் பட்டியலில் மனோஜ் திவாரி, கவுதம் காம்பீர், விஜய் கோயல், ஹர்தீப் சிங் பூரி, ஹர்ஷ வர்தன், விஜேந்தர் குப்தா, பர்வேஷ் சாகிப் சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.