தேசிய தலைநகர் டெல்லியில் 4,122 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஹைலைட்ஸ்
- Delhi has so far seen more than 4,000 cases of coronavirus
- Arvind Kejriwal indicated a phased removal of the lockdown
- Delhi is "prepared in terms of hospitals and kits", he said
New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில் 4,122 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த மாநிலங்களில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஊரடங்கை தளர்த்தப்போவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்திருந்தார். “டெல்லியில் இயல்பு நிலை திரும்ப இருக்கிறது. கோரோனா தொற்றுடன் வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும்“ என செய்தியாளர் சந்திப்பில் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ள பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ள பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளும் பச்சை மண்டலமாக அறிவித்து அப்பகுதியில் கடைகள் திறப்பது மற்றும் பல பொருளாதார நடவடிக்கைகள் தொடங்க அனுமதிக்கப்படவேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களை சீல் வைக்குமாறு மத்திய அரசினை கேட்டுக்கொள்கிறோம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட பின்பு மீண்டும் ஏதேனும் தொற்று பரவல் கண்டறியப்படுமாயின் அதை சமாளிக்க டெல்லி அரசு தயாராக உள்ளது.
தனியார் அலுவலகங்கள் 33 சதவிகித ஊழியர்களுடன் செயல்படலாம். மேலும், அத்தியாவசிய தேவைக்கான இணைய வழி விற்பனை, கால் சென்டர்கள், ஐடி நிறுவனங்களும் வழக்கம் போல இயங்கலாம்.
கொனாட் பிளேஸ் மற்றும் கான் மார்க்கெட் போன்ற சந்தைகள் மூடப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும். குடியிருப்புகளுக்கு அருகாமைக் கடைகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு இயங்க அனுமதி உண்டு.
பிளம்பர்ஸ், எலக்ட்ரீசியன் போன்ற சுய வேலையில் ஈடுபடுவோர் தொழில்களை தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.
போக்குவரத்தை பொருத்தமட்டில், பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியிருக்கும். தனியார் போக்குவரத்தில் காரில் ஒரு ஓட்டுநருடன் இருவர் பயணிக்கலாம். இருசக்கர வாகனத்தை பொறுத்த அளவில் ஒருவர் மட்டுமே பயணிக்க அனுமதி.
திருமண நிகழ்வுகளுக்கு 50 பேரும், இறுதி சடங்கு நிகழ்வுகளுக்கு 20 பேரும் அனுமதி.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மாறாக டெல்லி முழுவதும் சிவப்பு மண்டலமாக மாற்றுவது இரண்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். முதலாவதாக, மக்களின் வேலையிழப்பு. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் வருவாயை இழந்துள்ளனர். பலர் ஏற்கெனவே மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். பலர் வெளியேற தயாராக உள்ளனர்.
இரண்டாவதாக அரசினுடைய வருவாய் இழப்பு. ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் மாதத்தில் குறைந்தது 3,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவோம். ஆனால் இந்த ஆண்டு 300 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டியுள்ளோம். இதை வைத்து அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தினை முழுமையாக வழங்க முடியாது.
கட்டுப்பாடுகளைப் பொறுத்த அளவில், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, மால்கள், சந்தைகள், சினிமாக்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவற்றிற்கும், மதக்கூட்டங்கள் ஆகியவற்றிற்கும் கட்டுப்பாடுகள் தொடரும்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்குப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 1,256 பேர் மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.