2015ம் ஆண்டிலும் அரவிந்த் கெஜ்ரிவால் ராம் லீலா மைதானத்தில் பதவியேற்றார்.
New Delhi: டெல்லி சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மீதமுள்ள 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி, டெல்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள 8 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு ஆம் ஆத்மி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், பிரதமர் மோடி இன்று தனது வாரணாசி தொகுதியில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க உள்ளதால், அவர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது பழைய அமைச்சரவை குழுவினருடன் இன்று மூன்றாவது முறையாக பதவியேற்கிறார். டெல்லி அமைச்சரவையில் புதிதாக யாருக்கும் இடம் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், புது முகங்களான அதிஷி மற்றும் ராகவ் சாதா உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கிகோல்ட், இம்ரான் ஹூசைன் மற்றும் ராஜேந்தரி கவுதம் உள்ளிட்ட பழைய குழுவினரே டெல்லியில் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவை தொடர்ந்து, இன்று மாலை தனது அமைச்சர்களுக்கு இரவு விருந்துக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது அடுத்த 5 ஆண்டுகளுக்கான வியூகங்களை வகுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கெஜ்ரிவாலின் இந்த பதவியேற்பு விழாவுக்கு எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், மற்ற மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. மாறாக, டெல்லி மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும் படி செய்தித்தாள்களின் முதல்பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள், துப்பரவு தொழிலாளிகள் உள்ளிட்ட டெல்லியின் கட்டமைப்புக்கு உதவி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனிநபர்கள் 50 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
பரந்து விரிந்திருக்கும் ராம் லீலா மைதானம் சுமார் 1.25 லட்சம் மக்கள் பங்கேற்கும் அளவுக்கு கொள்ளளவை கொண்டது ஆகும். இந்த பதவியேற்பு விழாவில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என ஆம் ஆத்மி எதிர்பார்ப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 10 மணி அளவில் இந்த விழா துவங்குகிறது. தொடர்ந்து 12.15 மணி அளவில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக அப்பகுதியை சுற்றி சுமார் 3000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிசிடிவி கேமராக்கள், டிரோன்கள் மூலமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.