கடந்த மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். (File)
ஹைலைட்ஸ்
- பிரதமர் மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்.
- டெல்லி வன்முறையை தொடர்ந்து, இந்த சந்திப்பு நடைபெறுகிறது
- 3வது முறையாக முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சந்திக்கிறார்.
New Delhi: டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் மன்னிக்கப்படக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்று அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமரைச் சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, நாட்டின் தலைநகரில் இனி இதுபோன்ற கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மன்னிக்கப்படக்கூடாது என்று தான் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இதேபோல், பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். டெல்லியில் ஒருவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்கள் உட்பட வெறுப்புணர்வை தூண்டும் அரசியல் தலைவர்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, வெற்றுப்புணர்வை தூண்டும் பேச்சு தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நிகழ்ந்த பெரும் வன்முறையில், 46 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் தற்போது வடகிழக்கு பகுதிகளில் அமைதி திரும்பியுள்ளது. இந்தநிலையில், இன்று பிரதமர் மோடியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
கடந்த வாரம், டெல்லியில் பெரும் வன்முறை நிகழ்ந்த போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். அப்போது, கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக அமித் ஷா உறுதி அளித்திருந்தார்.
முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியேற்பு விழாவுக்குப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், பிரதமர் மோடி அதில் பங்கேற்கவில்லை. அப்போது, தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க அவர் சென்றிருந்ததால், பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.
எனினும், பிரதமர் மோடி ட்வீட்டர் மூலம் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது, அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த ட்வீட்டர் பதிவுக்குப் பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், நீங்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று எண்ணினேன். எனினும், உங்களது சூழ்நிலையை புரிந்துகொள்கிறேன். இந்தியர்கள் டெல்லியைப் பெருமையாகக் கருதும் அளவுக்கு அதன் முன்னேற்றத்திற்காக நாம் சேர்ந்து பணியாற்றுவோம் என்று அவர் தெரிவித்திருந்தார்.