Delhi Election 2020: "நான் எனது வாழ்க்கையை இந்த டெல்லி மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். டெல்லி மக்களின் மூத்த மகனாக இருந்து நான் செயல்பட்டு வருகின்றேன்"
New Delhi: அரவிந்த் கெஜ்ரிவால் NDTV-க்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் பேசும்போது, பாஜக-வை விட அதிகமாக பொய் பேசும் கட்சிகள் இங்கு இல்லை என்று காட்டமாக கூறியுள்ளார்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஷாஹீன் பாக்-ல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் இரவு பகல் என்று பாராமல் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அவ்வாறு போராடியவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
"அமித் ஷா ஒரு உள்துறை அமைச்சர். அவர் மிகவும் சக்திவாய்ந்தவர். அவர் நினைத்திருந்தால் சாலையில் போராடியவர்களை அப்புறப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. ஏன் என்றால் இந்த போராட்டத்தை மேற்கோள்காட்டிதான் வரவிருக்கும் டெல்லி தேர்தலில் அவரால் பேச முடியும். அதை தவிர பாஜகவிடம் பேச வேறொன்றும் இல்லை" என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். மேலும் ஷாஹீன் பாக், இந்து- முஸ்லீம் மற்றும் பாகிஸ்தான் இதை தவிர பாஜக எதையும் பேசாது என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் கெஜ்ரிவால், தன்னை தீவிரவாதி என்று அழைத்த ஒரு பாஜக தலைவருக்கு பதிலளிக்கும் வகையில் பேசும்போது, 'என்னைப் பார்த்தால் தீவிரவாதி போலவா தெரிகிறது. எதன் அடிப்படையில் அவர் என்னை அவ்வாறு அழைத்தார். நான் எனது வாழ்க்கையை இந்த டெல்லி மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். டெல்லி மக்களின் மூத்த மகனாக இருந்து நான் செயல்பட்டு வருகின்றேன். அவர்களுக்கு இலவச தண்ணீர், மின்சாரம், நல்ல கல்வி கொடுக்க பாடுபடுகிறேன். இந்நிலையில் டெல்லி மக்களே நான் யார் என்பதை தீர்மானிக்கட்டும்' என்று கூறினார்.