இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு
ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன் என நடிகர் சூர்யா தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா அதில் பேசுகையில், மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள்.
அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்திருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு நடத்துவது ஏன்?
எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றார்.
சூர்யாவின் இந்த விமர்சனம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றர். அந்த வகையில் சூர்யாவின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால் எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்? புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா அரை வேக்காட்டுத்தனமாக பேசுகிறார் என கடுமையாக விமர்சித்தார்.
இதேபோல், புதிய கல்விக்கொள்கை குறித்து பேசிய நடிகர் சூர்யாவை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும் கடுமையாக விமர்சித்தார். கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? தங்கள் படத்தின் விளம்பரத்திற்காகவும், அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறீர்களா? என்று அவர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்து தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.
மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்ட வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கின்றது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது கருத்து மீது எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கல்வி என்பது ஒரு சமூக அறம், பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான் அனைவருக்கும் சமமான தேர்வு என்பதை விட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது.
அகரம் பவுண்டேஷன் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட அகரம் பவுண்டேஷன் மூலம் மருத்துவ கல்வியில் சேர்க்க முடியவில்லை.
புதிய கல்விக்கொள்கையில் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுக்கு பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மானவர்களை நுழைவுத்தேர்வுகள் துடைத்து எறிந்து விடும்.
சமமான தேர்வு வைப்பதைவிட சமமான தரமான இலவசக்கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. நம் நாட்டில் கல்வி என்பது ஏழைகளுக்கும் ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. சமமான வாய்ப்பு மற்றும் தரமான கல்வி மறுக்கப்பட்ட சக ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை அறிந்த சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன். கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி .
வரைவு புதிய கல்விக்கொள்கை பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இணையதளத்தில் கூறுங்கள். மத்திய அரசும் அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயரப்பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.