This Article is From Nov 27, 2019

'பாஜக தலைவர்கள் மீது விழுந்த அடி' : பட்நாவீஸ் ராஜினாமா குறித்து காங். தலைவர்கள் கருத்து!!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.

'பாஜக தலைவர்கள் மீது விழுந்த அடி' : பட்நாவீஸ் ராஜினாமா குறித்து காங். தலைவர்கள் கருத்து!!

பட்நாவிசின் ராஜினமா ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

New Delhi:

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவீஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது என்பது மாநில பாஜகவுக்கு மட்டும் பின்னடைவு அல்ல; அது, டெல்லியில் இருந்து உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் பாஜக தலைவர்கள் மீது விழுந்த அடி என்று காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். 

பெரும் பரபரப்புக்கு மத்தியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், பட்நாவீஸ் ராஜினாமா செய்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், 'மக்களின் தீர்ப்பை கடத்தியவர்கள் தற்போது வெளிப்பட்டு விட்டார்கள். தேவேந்திர பட்நாவீசும், அஜித் பவாரும் மகாராஷ்டி மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். பொய்யால் கட்டமைக்கப்பட்ட பாஜக அரசு சீட்டுக்கட்டு சரிவதைப் போல சரிந்து விட்டது' என்றார். 

மற்றொரு மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், 'அரசியலமைப்பு ஜனநாயக மாண்புகளுக்கு கிடைத்த வெற்றியாக பட்நாவீசின் ராஜினாமாவை பார்க்கிறேன். குதிரை பேரம் நடத்தி பாஜக அரசை ஏற்படுத்தி விடலாம் என்று அக்கட்சி தலைவர்கள் கருதினர். இது தேவேந்திர பட்நாவீசின் தோல்வி மட்டுமல்ல. அவர்களை டெல்லியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் பாஜக தலைவர்கள் மீது விழுந்த அடி. உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கிறேன்' என்றார். 

பட்நாவீஸ் ராஜினாமா செய்தபோது, மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் ராஜினாமா செய்வதாக கூறினார். அஜித் பவாரோ, தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 


 

.