ஐஐடி-யிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், ஏன் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பது இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி...
Chennai: ஐஐடி மெட்ராஸ் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக, ஸ்டார்ட்-அப்ஸ், வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் மிகவும் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி, 190 ஸ்டார்ட்-அப்களை கவனித்து வருகிறது. இந்த ஒவ்வொரு ஸ்டார்ட்-அப்கள் மூலமும் 25 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
ஐஐடி-யிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், ஏன் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பது இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, “கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அவர்களுக்குப் புதிய தொழில்நுடபம்தான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. எங்களின் பெரும்பான்மையான ஸ்டார்ட்-அப்கள், சாதனங்கள் மற்றும் இயந்திரங்களை உருவாக்கி வருகின்றன. இவை மிகவும் பெரியதாக மாற நேரம் எடுக்கும். அதை நீங்கள் பொருளாதார ரீதியில் மட்டும் பார்க்க முடியாது. சமூகத்தில் அவை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார்.
பல துறைகளிலும் வேலை வாய்ப்பு இழப்பு என்பது பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. அது குறித்து பேசிய ராமமூர்த்தி, “ஐஐடி பட்டதாரிகள் போகும் வேலைக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடி மெட்ராஸில் படிக்கும் 10 சதவிகித மாணவர்கள்தான் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். மீதம் உள்ளவர்கள் இங்கேதான் பணி செய்து வருகிறார்கள்” என்கிறார்.
ஐஐடி கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கு எழுதப்படும் ஐஐடி-ஜே.இ.இ தேர்வு குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதன் கடினத்தன்மை குறித்து ராமமூர்த்தி, “ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் ஐஐடி ஜே.இ.இ தேர்வை எழுதுகின்றனர். அதில் 1.85 லட்சம் மாணவர்களை வடிகட்ட வேண்டும். அதனால்தான் இந்த தேர்வு மிகவும் கடினமானதாக இருக்கிறது. இந்தத் தேர்வில் பங்கு பெறும் மற்றவர்களும் திறமையானவர்கள்தான். அவர்களின் பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்ணைப் பார்த்தாலே அது தெரியும். ஆனால், இந்தத் தேர்வில் யாருக்கு அதிக விஷயம் தெரிந்திருக்கிறது என்பதை மட்டுமே சோதிக்கும்” என்று விளக்கம் கொடுக்கிறார்.
ஐஐடி மெட்ராஸுக்கு சில அமைப்புகள் இயங்க அனுமதி கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுவது குறித்தும் பேசிய அவர், “அப்படி வரும் தகவல்கள் உண்மையல்ல. கருத்து சுதந்திரம் இருப்பதனாலேயே அப்படியும் செய்திகள் கசிகின்றன” என்று முடித்துக் கொண்டார்.