Guwahati: அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இடாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, உரையாற்றினார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அசாம் சென்ற அவர் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டது. இதன்படி குடியுரிமை மசோதா, மக்களவையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
குடியுரிமை மசோதா குறித்து சிலர் ஏசி அறைக்குள் இருந்து கொண்டு தவறான தகவல்களை பரப்புகின்றனர். குடியுரிமை மசோதாவால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை மசோதாவால் அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்றபிறகே, இந்த மசோதாவை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது எனக் கூறினார்.