தடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அணி திரண்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் பேரணி நடத்தி வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் பகுதியில் இருந்து பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அணி திரண்டுள்ளனர்.
முன்னதாக, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தன.
இந்த நிலையில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர், சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில், தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அப்படி இருக்கும் போது, சென்னையில் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த போராட்டம் நடைபெற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், சட்டம் ஒழுங்கும் பாதிப்பு அடையும். எனவே இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதிக்கக் கூடாதென உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்ய நாராயணனன், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியளிக்கப்படாத போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதி கிடையாது என்று கூறி, மார்ச் 11-ம்தேதி வரையில் போராட்டம் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த சூழலில் திட்டமிட்டபடி தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும், தடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அணி திரண்டுள்ளனர்.