img: CAA-க்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மாநிலம் முழுவதும் நடந்து வரும் நிலையில் ஆதரவாக பாஜக பேரணி மேற்கொண்டுள்ளது.
Kolkata: குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவின் சாலைகள் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் காவி கொடிகள் தென்பட மாபெரும் பேரணியை பாஜகவினர் மேற்கொண்டுள்ளனர். இந்த பேரணியை அக்கட்சியின் தேசிய செயலாளர் ஜெ.பி.நட்டா தலைமை தாங்கி நடத்தி செல்கிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து சினிமா முதல் சியாம்பஜார் வரை 4.3 கி.மீக்கு பாஜக ஆதரவாளர்கள் கோஷமிட்டபடி பேரணியாக செல்கின்றனர்.
இந்த பேரணியில் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, சட்டர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த பேரணியை ஜெ.பி.நட்டாவும், கைலாஷ் விஜய்வார்கியாவும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த பேரணியை நாங்கள் அமைதியான வழியில் எடுத்துச்செல்கிறோம். மேற்குவங்கத்தில் மக்கள் தவறாக வழிநடப்படுகின்றனர். இங்கு முதல்வரே மக்களுக்கு தொந்தரவு அளிக்கிறார். அவர்களிடம் பொய்களை கூறி தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என கட்சி தலைவர் ரூபா கங்குலி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்த பேரணி சியாம்பஜாரை அடைந்ததும், ஜெ.பி.நட்டா குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நலம் குறித்து கூட்டத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை என்ன ஆனாலும் மேற்குவங்கத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், அந்த இரண்டு சட்டங்களுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக அவர் பல்வேறு பேரணிகளை மேற்கொண்டு வருகிறார்.
(With inputs from ANI)