நிலைமையை ஆய்வு செய்த பின்னர் சில பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- மொத்தமுள்ள 900 பள்ளிகளில் 196 பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
- பல பகுதிகளில் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்.
- மூன்றில் இரண்டு பங்கு தொலைபேசி, இணைய சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
Srinagar: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், காஷ்மீர் மறுசீரமைக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரங்களால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் கடந்த இரண்டு வாரமாக அங்கு ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஸ்ரீநகரில் உள்ள ஒரு சில ஆரம்ப பள்ளிகளும், அனைத்து அரசு அலுவலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் தடை உத்தரவு படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு தொலைபேசி, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து, இன்று முதல் 196 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு தொலைபேசி, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக ஸ்ரீநகர் துணை ஆய்வாளர் சாஹித் இக்பால் கூறும்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் சில பகுதிகளில் மட்டுமே பள்ளிகளைத் திறந்துள்ளோம். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட இடங்களில் தங்கள் குழந்தைகளை அனுப்புமாறு பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறோம். குழந்தைகளின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்படும், ஒரு சில அரசு அலுவலங்கள் மட்டும் வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படும்.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் கூறும்போது, தடை உத்தரவுகளை தளர்த்தும் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வதந்திகளை பரப்பும் செயல் குறைந்து வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு பின்னரே இணையதள மற்றும் தொலைபேசி சேவைகள் மீண்டும் அளிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழவில்லை என்றும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
விரைவில் இணையதள மற்றும் தொலைபேசி சேவைகளை முழுமையாக வழங்கப்படும் என்றும், அதற்கான பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் இயல்பு நிலை முழுமையாக திரும்பியதும் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கன்சால் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் கே.விஜயகுமார் என்டிடிவியிடம் கூறும்போது, கடந்த 2010ஆம் ஆண்டில், 110 பேர் உயிரிழந்தனர். அதனால், இந்த முறை எங்களால் இயன்ற வரை எந்த உயிரிழப்பும் ஏற்படாம் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இதற்கு முன் நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லை தாண்டிய செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.