This Article is From Aug 13, 2018

ஏரோ இந்தியா கண்காட்சியை உ.பி.க்கு மாற்றுவதா? கொதிக்கும் கர்நாடகா

இந்திய வான்படையின் கேந்திரமாக உள்ள பெங்களூரில் இருந்து இக்கண்காட்சி உ.பி. தலைநகர் லக்னோவுக்கு மாற்றப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன

ஏரோ இந்தியா கண்காட்சியை உ.பி.க்கு மாற்றுவதா? கொதிக்கும் கர்நாடகா

ஹைலைட்ஸ்

  • 1996 முதல் இக்கண்காட்சி பெங்களூரில் நடைபெற்று வருகிறது
  • நிர்மலா சீதாராமன் பெங்களூரு வந்தபோது கோரிக்கையை வைத்தோம்: குமாரசாமி
  • நவம்பர்-டிசம்பரில் இக்கண்காட்சி லக்னோவில் நடத்தப்படலாம்
Bengaluru:

ஏரோ இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய இராணுவ வான்படைத் திறன் கண்காட்சி ஆகும். இது 1996 முதல் பெங்களூரில் நடந்து வருகிறது. தற்போது இதனை உத்தர பிரதேசத்துக்கு மத்திய அரசு மாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகத் தொடங்கியதை அடுத்து, இதனைத் தெளிவுபடுத்துமாறு கர்நாடக முதல்வரும் அமைச்சர்களும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். இந்திய வான்படையின் கேந்திரமாக உள்ள பெங்களூரில் இருந்து இக்கண்காட்சி உ.பி. தலைநகர் லக்னோவுக்கு மாற்றப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மத்திய அரசு ஏற்கனவே உ.பி.யில் மிகப்பெரிய பாதுகாப்பு காரிடார் (வழித்தடம்) ஒன்றினை அமைத்து வருகின்றது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஏரோ இந்தியா கண்காட்சியைத் தன் மாநிலத்துக்கு மாற்றும்படி அண்மையில் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றிய பத்து முக்கியக் குறிப்புகள்:

  1. பெங்களூரின் வெளியே உள்ள ஏலஹன்கா வான்படைத் தளத்தில்தான் எரோ இந்தியா கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் ஏலஹன்கா விமானப்படை நிலையத்தில் இக்கண்காட்சி நடைபெற்றது. இதில் 549 பாதுகாப்புத் தளவாட நிறுவனங்களும் 51 நாடுகளில் இருந்து 72 விமானங்களும் கலந்துகொண்டன. இத்துறை சார்ந்த 2 இலட்சம் வணிகர்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டார்கள்.
  2. “சுதந்திர காலத்தில் இருந்து நாட்டின் பாதுகாப்புத்துறை மையமாக இருந்து வரும் மாநிலம் கர்நாடகம். ஆனால் தற்போதைய பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல முக்கியத் திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் கர்நாடகா தொடர்ந்து இழந்து வருகிறது” என்று கர்நாடக துணை முதல்வர் டாக்டர் ஜி. பரமேஷ்வரா ட்விட்டரில் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
  3. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (HAL) மற்றும் பல துணைக்கருவி தயாரிப்பு அலகுகளைக் கொண்டுள்ள கர்நாடக மாநிலம் இந்திய வானூர்தியியலின் தலைநகராக விளங்கி வருகிறது.
  4. “ஏரோ இந்தியா கண்காட்சிக்கு பெங்களூருதான் சிறந்த இடம். அதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இங்கு உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு வந்திருந்தபோதே அவரிடம் நாங்கள் கோடியிருந்தோம். அப்படி இருக்கையில் ஏன் மத்திய அரசு உ.பி.க்கு இதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது? இதற்கு நமது கர்நாடக பாரதீய ஜனதா தோழர்கள் பதிலளிக்க வேண்டும்” என்று இன்று கர்நாடக முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்.
  5. ஏரோ இந்தியா கண்காட்சி இவ்வாண்டு நவம்பர்-டிசம்பர் மாதத்தில் லக்னோவில் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு வழத்தடம் அமைப்பதை அறிவிக்கும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் “ஏரோ இந்தியா கண்காட்சியை எங்கள் மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் அது இங்கு இராணுவத் தளவாடங்கள் தயாரிப்பைப் பெருக்க வழிவகை செய்யும்” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  6. “ஏரோ இந்தியா நிகழ்ச்சியை உத்தர பிரதேசத்தில் நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சரக் கேட்டுக்கொள்கிறோம். அதற்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆகவே விரைந்து இந்த நல்ல முடிவை அவர் அறிவித்தால் நாங்கள் முன்னேற்பாடுகளைத் தொடங்க ஏதுவாக இருக்கும்” என்று யோகி ஆதித்யநாத் பேசியிருந்தார்.
  7. அலிகர், ஆக்ரா, கான்பூர், லக்னொ, ஜான்சி, சித்ரகோட் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரும் இராணுவத் தொழிற்சாலை வழித்தடம் உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
  8. ஏரோ இந்தியா கண்காட்சி பெங்களூரில் இருந்து மாற்றப்படலாம் என்று வரும் தகவல்கள் குறித்து கேட்டபோது, “பல மாநிலங்களும் இந்நிகழ்ச்சியை வேறு புதிய மாநிலத்தில் நடத்தக் கோரி வருகின்றன. முன்பு டெல்லியில் நடந்து, பின்னர் கோவாவுக்கு மாற்றப்பட்ட டிஃபன்ஸ் எக்ஸ்போ நிகழ்ச்சியும் பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது” என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக இம்மாதத் தொடக்கத்தில் டெக்கன் ஹெரால்ட் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  9. சனிக்கிழமை இது தொடர்பாக கர்நாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி. தேஷ்பாண்டே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்துப் பேசினார். கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் குண்டு ராவும் இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
  10. கர்நாடகாவில் இருந்து நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், அவருக்கு எம்பி பதவையை அளித்த கர்நாடகத்தையே வஞ்சிக்கிறார் என அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏற்கனவே பல இராணுவத் திட்டங்கள் கர்நாடகாவிடம் இருந்து கைநழுவிப் போயுள்ள நிலையில் ஏர் இந்தியா கண்காட்சியையும் வேறு மாநிலத்துக்கு மாற்றப்போவதாக வரும் செய்திகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது. ரபேல் ஒப்பந்தம் HAL நிறுவனத்திடம் இருந்து பிடுங்கப்பட்டதையே கர்நாடக மக்கள் இன்னும் மறக்கவில்லை” என்று அவர் தனது ட்வீட்டில் பொருமித் தள்ளியுள்ளார்.

.