மசோதாவுக்கு ஆதரவாக 245 பேரும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர்.
New Delhi: முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில் நேற்று மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது கூடிய சீக்கிரம் சட்டமாக அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘ஓர் பாலின ஈர்ப்புக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிப்பதும், முத்தலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதிர்ச்சியாக இருக்கிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 245 பேரும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட 5 விடுமுறை நாட்களுக்கு பின்னர் நேற்று மக்களவை கூடியதும் முத்தலாக் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 4 மணி நேர விவாதத்திற்கு பிறகு மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், எதிர்கட்சிகள் கொண்டு வந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாதி கட்சிகளின் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
முத்தலாக் தடை மசோதா குறித்து மக்களவையில் பேசிய ஒவைசி, ‘முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிப்பதற்கு 100 சதவிகித முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஓர் பாலின ஈர்ப்பு குற்றமற்றது என சொல்லும் மத்திய அரசு, முத்தலாக் விஷயத்திற்கு மட்டும் இப்படியொரு நிலைப்பாட்டை ஏன் எடுக்கிறது. பாலின சிறுபான்மையினருக்கு ஒரு நியாயம், மதச் சிறுபான்மையினருக்கு ஒரு நியாயமா?' என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும், ‘உங்கள் நம்பிக்கை உங்களுக்கு பெரியது என்றால், எங்கள் நம்பிக்கை எங்களுக்குப் பெரியது. உங்கள் அரசின் எண்ணம் தூய்மையானது அல்ல. நீங்கள் என்ன சட்டம் வேண்டுமானாலும் கொண்டு வரலாம், ஆனால் நாங்கள் எங்கள் மதத்திற்கு எதிராக நடந்து கொள்ளமாட்டோம்' என்றார்.