முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அசோக் கெலாட்டிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
New Delhi/Jaipur: ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஆட்சியமைக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் பிரபலங்களாக இருந்து வருகின்றனர். இருவரில் ஒருவர் மட்டுமே முதல்வராக பொறுப்பேற்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், அசோக் கெலாட் முதல்வராக தேர்வாகி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசோக் கெலாட் ஏற்கனவே 2 முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளார். காங்கிரசின் தலைவராக ராஜீவ் காந்தி இருந்தபோது, அவரால் அசோக் கெலாட் அடையாளம் காணப்பட்டார். 67 வயதாகும் கெலாட் தற்போது 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
சச்சின் பைலட் முந்தை மன்மோகன் சிங் அரசில் அமைச்சராக பதவி வகித்திருந்தார். 41 வயதாகும் இளம் தலைவரான அவருக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசோக் கெலாட் வசம் முதல்வர் நாற்காலி செல்லவுள்ளது.