நேர்மைக்கு பரிசு அவமானம் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் கெம்கா.
Chandigarh: தனது 28 ஆண்டுகால அரசு அதிகாரி பணியில் அதிக இடமாறுதல்களை சந்தித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா தற்போது 53-வது பணியிட மாறுதலுக்கு ஆளாகியுள்ளார்.
அரியானாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் கெம்கா கடும் நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். 1991-வது பிரிவை சேர்ந்த அதிகாரியான அவர் இதுவரையில் 52 முறை பணியிட மாறுதலுக்கு ஆளாகி இருந்தார்.
கடைசியாக அவருக்கு அரியானாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் முதன்மை செயலர் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அவரை தொல்லியல் துறைக்கு மாற்றி அரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. இது 28 ஆண்டுகால பணியில் அவர் சந்திக்கும் 53-வது பணியிட மாறுதல் ஆகும்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா, 'மீண்டும் பணியிட மாறுதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். நேற்று அரசியலமைப்பு நாள் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீண்டும் ஒருமுறை உடைத்தெறியப்பட்டுள்ளன. என்னுடைய பணியிட மாறுதல் சிலருக்கு மகிழ்ச்சியை தரும் என்று நினைக்கிறேன். நேர்மைக்கு கிடைத்த பரிசு என்பது அவமானமாக உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
2012-ல் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில ஒப்பந்தத்தை அசோக் கெம்கா ரத்து செய்தார். இதனால் அவர் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டார். வதேரா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
53 வயதாகும் அசோக் கெம்கா கடந்த 28 ஆண்டுகளில் தொடர்ந்து பணியிடமாற்றத்திற்கு ஆளாகி வருகிறார். மாநிலத்தில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பாஜக ஆண்டாலும் சரி. இவரது பணியிட மாறுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.